‘அன்னதான திட்டத்தின் மூலம் கோவில்களில் தினமும் 82 ஆயிரம் பேர் சாப்பிடுகிறார்கள்’ – அமைச்சர் சேகர்பாபு தகவல்
Share
அன்னதான திட்டத்தின் மூலம் கோவில்களில் தினமும் 82 ஆயிரம் பேர் சாப்பிடுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவகத்தில் கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்களை உணவு பாதுகாப்பு ஆலோசகர்கள் தரம் உறுதி செய்து செயலி மூலம் பதிவேற்றும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று (செப் 19) தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு புதிய திட்டங்களும், சேவைகளும் செயல்படுத்தப்பட்டு வருவதோடு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களும் செம்மையாக நடைபெற்று வருகின்றன. இரண்டு கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதானத் திட்டம், 8 கோவில்களுக்கும், 754 கோவில்களில் வழங்கப்பட்டு வந்த ஒருவேளை அன்னதானத் திட்டம் 764 கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு நாள்தோறும் சுமார் 82 ஆயிரம் பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை ஆகிய 3 கோவில்களில் முழுநேர அன்னதானத் திட்டமும், 7 கோவில்களில் ஒருவேளை அன்னதானத் திட்டமும் தொடங்கப்படவுள்ளன.
பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு 4,000 மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் தைப்பூசத்திற்கு பழனிக்கு வருகைதரும் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் நபர்கள் வீதம் 20 நாட்களுக்கு 2, லட்சம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டமும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவிழா நாட்களில் நாளொன்றுக்கு 500 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 15 கோவில்களில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேலும் 5 கோவில்களில் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
சட்டமன்ற அறிவிப்பின்படி, கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரத்தோடு இருப்பதனை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் உறுதி செய்து செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் ஒவ்வொரு கோவிலிலும் ஆண்டிற்கு மூன்று முறை ஆய்வு செய்து அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமாக உள்ளதா எனவும், சமையல் கூடம், உணவருந்தும் கூடம் சுத்தமாக பாராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்கும். மாதந்தோறும் குறைந்தபட்சம் 125 கோவில்களை ஆய்வு செய்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.













