மகளிர் உரிமைத் தொகையால் கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகரிப்பு? – முதலமைச்சர் உத்தரவு
Share
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதா என்ற கோணத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாநில திட்டக்குழுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில திட்டக்குழுவின் 4ஆவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜெயரஞ்சன், குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு திட்டங்கள் குறித்து திட்டக்குழு அளிக்கும் அறிக்கைகள் மிகவும் பயன் உள்ளதாக இருப்பதாக கூறினார். குறிப்பாக விடியல் பயணம், காலை உணவு திட்டம் ஆகியவை சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன என்பது குறித்த அறிக்கை மிகவும் பயன் உள்ளதாக இருந்தது என்று முதலமைச்சர் கூறினார்.
அதே போன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அறிக்கை தேவை என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. இவற்றின் புள்ளி விவரம் மட்டுமின்றி கள ஆய்வுகள் மூலம் ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார். நான் முதல்வன் திட்டம் மூலம் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 183 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். அரசு கொண்டு வரும் திட்டங்களை செலவினத்தின் அடிப்படையில் மட்டும் கணக்கிடாமல், பயன்பாட்டின் அடிப்படையில் அணுகுமாறு தெரிவித்தார். மேலும் அரசு துறைகளுடன் இணைந்து செயல்படுமாறு கூறிய முதலமைச்சர், கள ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.













