விடைபெற்றார் விநாயகர்.. புதுச்சேரி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
Share
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி முடிந்து 5வது நாளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி முடிந்து 3-வது, 5-வது மற்றும் 7-வது நாட்களில் பூஜிக்கப் பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி புதுச்சேரியில் வருடம் தோறும் ஐந்தாம் நாளில் புதுச்சேரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல்வேறு வடிவங்களில் ஆன விநாயகர் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்துவரப்பட்டு கடலில் கரைக்கப்படும். எனவே இந்த வருட விநாயகர் ஊர்வலத்தை ஒட்டி புதுச்சேரி அரசு பல்வேறு வழிகாட்டுதல் விதிமுறைகளை விதித்திருந்தது. மேலும் மதுபான கடைகளும் அடைக்கப்பட்டன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சாரம் அவ்வை திடலில் துவங்கியது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வடிவங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் டிராக்டர் மற்றும் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலத்தை புதுச்சேரி சபாநாயகர் செல்வம் துவங்கி வைத்தார். முன்னதாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் தாரை தப்பட்டை, டிரம்ஸ், சண்டை மேளம், கேரளா வாத்தியங்கள் உட்பட பல்வேறு இசை வாத்தியங்கள் இசைக்க காளி, விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து பக்தர்கள் நடனமாடி வழிநெடுக்க பூத்தூவி விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
புதுச்சேரியின் முக்கிய வீதியான, காமராஜர் சாலை, நேரு வீதி, மகாத்மா காந்தி சாலை, வழியாக சென்று எஸ் வி பட்டேல் சாலை வழியாக கடற்கரை சென்றடைந்து. கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் ராட்சச கிரேன் இயந்திரங்களைக் கொண்டு பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் கடலில் கரைக்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.













