தமிழகத்தில் 2 லட்சம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன – 1500 கோடி ரூபாய் இழப்பு
Share
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின் கட்டண உயர்வை ரத்து செய்து, பழைய கட்டண முறையை அமல்படுத்த வேண்டும், ஆண்டுக்கு ஒரு சதவீத மின் கட்டணம் உயர்வு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை சிறு குறு தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் சுமார் 2 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் 2 லட்சம் தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபாகங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் வேலை நிறுத்தம் காரணமாக மூடபப்ட்டன. குறிச்சி, சிட்கோ, கணபதி, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சிறு, குறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு கிடந்தன. மேலும் அந்தந்த தொழிற்சாலைகள் முன்பு கருப்பு கொடியும் ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் உள்ள சிறு, குறு பனியன் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், பனியன் தொழில் சார்ந்த சைமா, டீமா, டெக்பா, நிட்மா உள்ளிட்ட 19 தொழில் அமைப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த குறு சிறு தொழில் நிறுவனங்களும் மின் கட்டண உயர்வுக்காக கைகோர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளன. தொழில்துறையினர் இந்த போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் ரூ.1,500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.













