அண்ணாமலை தலைமையில் அக். 3-ஆம் தேதி பாஜக ஆலோசனை
Share
பாஜகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுடன் வருகின்ற அக்டோபர் 3 ஆம் தேதி அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் முற்றியது. அத்துடன், 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியமைக்கும் என அண்ணாமலை கூறியதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்தது. அதிமுகவின் இந்த முடிவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அல்லது அக்கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் தரப்பில் இருந்து எதிர்வினை ஆற்றப்படவில்லை.
அதேவேளையில், என் மண் என் மக்கள் பயணத்தில் தான் பாஜகவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். அப்போது, பாஜகவின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன், கூட்டணி தொடர்பான கருத்துகளை அண்ணாமலை கேட்டறிவார் என கூறப்படுகிறது. இதையடுத்து, பாஜகவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.













