LOADING

Type to search

இந்திய அரசியல்

“நாங்கள் விரல் காட்டியதால் தான் பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர் ” அதிமுக துணைப் பொதுச்செயலாளர் முனுசாமி பேட்டி

Share

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“பாஜகவுடன் கூட்டணி குறித்த அதிமுகவின் நிலைப்பாடு குறித்து நாங்கள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டோம். எங்கள் கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றி விட்டோம். அதிமுக, பாஜக கூட்டணி இடையே ஏற்பட்ட முறிவுக்கு, அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்கிற விளக்கமும் கொடுத்துவிட்டோம்.

ஆனால், சமூக வலைதளங்கள், சில ஊடங்களில் திமுக அரசை கலைக்க பாஜகவை நாங்கள் நிர்ப் பந்தம் கொடுத்தோம் எனவும், அதனால் தான் கூட்டணி முறிந்தது என தவறான தகவல்களை மக்களிடையே பரப்பி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகளில், தமிழகத்தில 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு கட்சி இதுபோன்ற கீழ்தரமான செயலை என்றைக்கும் செய்யாது. இதுபோன்ற தவறான கருத்துகளை சமூகவலைதளங்களில் பரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக பொது செயலாளர் பழனிசாமியை, நம்பகத்தன்மையற்றவர் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். உண்மையிலேயே நம்பிக்கை துரோகத்தின் சின்னம் அவர்தான். பண்ருட்டி ராமச்சந்திரன் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ் என அவர் சென்ற இடங்களில் யாருக்கும் விசுவாசமாக இல்லை. நம்பிக்கை துரோகியுடன் அமர்ந்து கொண்டு, அவரை நம்பிக்கைக்கு உரியவர் என கூறுகிறார். தங்களுடைய சுயலாபத்துக்காக கொள்கையை விற்று, ஆதாயம் தேடும் 2 தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். நம்பகத்தன்மையற்றவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

பாஜக தலைவர் அண்ணாமலையை, 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக்க வேண்டுமென பாஜக கோரிக்கை வைத்தாக, முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் பேசி உள்ளார். பாஜக கூட்டணி முறிவுக்கான காரணம் என்ன என்பதை தெளிவாக தீர்மானம் போட்டு அறிவித்துவிட்டோம். இருப்பினும், சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் திரும்ப, திரும்ப வரும்போது, அந்தக் கருத்துகளை மனதில் பதிந்து மேடையில் உண்மைநிலை மறந்து இவ்வாறு கருத்துகளை சொல்வது இயல்பு. கருப்பண்ணன் அவ்வாறு தான் பேசி இருக்கிறார்.

2026ம் ஆண்டு பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் இலக்கு. இதில் பாஜக எங்கே வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.