கிளிநொச்சியில் இயங்கிவரும் கருவுறுதல் திட்டத்திற்கு கனடிய தமிழ்ச் சமூகத்தின் ஆதரவு அதிகரிக்க வேண்டும்!
Share
மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் கோரிக்கை
வட இலங்கையில் கருவுறுதல் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பெற்றுள்ள கிளிநொச்சி கருவுறுதல் (Fertility/IVF) திட்டத்திற்கு மார்க்கம் நகரில் இயங்கிவரும் கிரீன்ஸ்பரோ மூத்தோர் நலச்சங்கமும் சமூக உறுப்பினர்களும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற நிதி திரட்டும் முயற்சியின் போது, கிரீன்ஸ்பரோ மூத்தோர் நலச்சங்கத்தின் சார்பில் திருமதி செல்வா அருள்ராஜசிங்கம், கனடாவில் இயங்கும் யாழ்ப்பாண மருத்துவ பீட பழைய மாணவர் சங்கத் தலைவர் டாக்டர் தமிழ்வாணனிடம் $1,000 நன்கொடைக் காசோலையை வழங்கினார்.
அதேவேளை, ரகுநாதன் மற்றும் கனகரெத்தினம் குடும்பத்தினரும்$1,000 நன்கொடையை MPP லோகன் கணபதியிடம் வழங்கினர். இவ்விரு நன்கொடைகளும் இணைந்து திட்டத்திற்காக $2,000 நிதியை பெற்றுக்கொடுத்துள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடமும் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையும் இணைந்து முன்னெடுத்து வரும் இந்த திட்டத்தின் ஆண்டு செயல்பாட்டு செலவு சுமார் $25,000 ஆகும். டாக்டர் ரகுராமனின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியின் வழியாக , கருவுறுதல் சிக்கல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மலிவான மற்றும் அணுகக்கூடிய சிகிச்சை மற்றும் IVF சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வட மாகாணத்தில் சுமார் ஐந்தில் ஒரு தம்பதியினர் கருவுறுதல் சவால்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால், இந்த சேவையின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, கிளிநொச்சியில் குறைந்த செலவில் கருவுறுதல் சிகிச்சை மற்றும் IVF வசதி நிறுவப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்களின் தாராள மனப்பான்மைக்கு நன்றி தெரிவித்த MPP லோகன் கணபதி, கிரீன்ஸ்பரோ மூத்தோர் நலச்சங்கத்தினரையும் ரகுநாதன் மற்றும் கனகரெத்தினம் குடும்பத்தினரையும் பாராட்டினார். அவர்களின் பங்களிப்பு, கருவுறுதல் சவால்களை எதிர்கொள்ளும் பல குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கும் இந்த முக்கிய சேவையை தொடர்ந்து முன்னெடுக்க உதவும் என்று அவர் தெரிவித்தார்.










