‘ஓம்’ படத்தின் கதை ஒரே பாகத்தில் முடியுமென இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்
Share
‘ஓம்’ படத்தின் கதை ஒரே பாகத்தில் முடியுமென இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்- சாப்டர் 1’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘ஓம்’ திரைப்படம் முதலில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, ‘ஓம்’ திரைப்படத்தின் கதை முதல் அத்தியாயத்திலேயே முழுமையாக முடிவடையும் என்றும், இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வரும் என எதிர்பார்க்க வேண்டாம் என்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். அதாவது, இப்படத்தின் தலைப்பில் ‘அத்தியாயம் 1’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அடுத்த பாகம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்துப் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “‘அத்தியாயம் 1’ என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு இரண்டாம் பாகம் வரும் என எதிர்பார்க்க வேண்டாம். இது பல பாகங்களாகத் தொடரும் கதை அல்ல. இந்த அத்தியாயத்திலேயே கதை முழுமையாக முடிவடையும்” என்று தெரிவித்துள்ளார்.












