ஊர்க்காவல் படைவீரர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டுமென சீமான் வலியுறுத்தினார்
Share
ஊர்க்காவல் படைவீரர் வெங்கடேசன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக் அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே தளவாய் கிராமத்தில் நள்ளிரவில் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசனை போதைக்குற்றவாளிகள் தலையில் கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ள செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். தமிழ்நாட்டில் பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய பாதுகாவல் படையினருக்கே பாதுகாப்பில்லாத கொடுஞ்சூழல் உருவாகியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசனின் குழந்தைகளான தமிழ்ச்செல்வன், அர்ச்சனா இருவரும் ஏற்கனவே தாயை இழந்துவிட்ட நிலையில் தற்போது தந்தையையும் இழந்து தவித்து நிற்பது மிகுந்த மனத்துயரை அளிக்கிறது. தவெக அரசின் அலட்சியத்தால் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை, ஒரு குடும்பத்தையே முற்று முழுதாகச் சிதைத்துவிட்டதுதான் பெருங்கொடுமை. போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த தவறி, இன்னும் எத்தனை குடும்பங்களைச் சிதைக்கத் தவெக அரசு நினைக்கிறது? ஊர்க்காவல்படை காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை உருவாகியிருப்பது, தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கான கேள்வியை எழுப்புகிறது. இரவு பகலாக மக்களின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் காவலர்களைத் தாக்கும் அளவிற்குக் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் வந்தது எப்படி? அந்த அளவிற்கு தவெக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதே இப்படுகொலை நிகழ முதன்மைக் காரணமாகும். போதைப்பொருள் பயன்பாட்டையும், போதை ஆசாமிகளின் அட்டூழியங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? காவலர்களுக்கே பாதுகாப்பு வழங்க முடியாத அரசு, பொதுமக்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்தும்? பொதுமக்கள் மற்றும் காவலர்களின் பாதுகாப்பில் தவெக அரசு அலட்சியம் காட்டுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. ஆகவே, ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசனை படுகொலை செய்த போதை குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதோடு, போதைப்பொருள் புழக்கத்தையும், போதையால் நிகழும் குற்றங்களையும் தடுக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசன் குடும்பத்திற்கு வெறும் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தவெக அரசு அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல; தாயையும் இழந்து, அரசின் அலட்சியத்தால் தந்தையையும் இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு, ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.













