LOADING

Type to search

உலக அரசியல்

ஆப்பிரிக்க நாட்டில் துப்பாக்கி சூட்டில் 25 பேர் உயிரிழந்தனர்

Share

ஆப்பிரிக்க நாடான சாட்டில், குடிநீர் ஆதாரத்தை பயன்படுத்துவது தொடர்பாக இரு வேறு இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர துப்பாக்கி சூடு மோதலில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சாட் (Chad) நாடு, காலநிலை மாற்றத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஐ.நா சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இங்கு நிலம், நீர் மற்றும் கால்நடைகளை மேய்ப்பது தொடர்பாக பல்வேறு சமூகத்தினரிடையே அடிக்கடி மோதல்கள் வெடிப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கிரெடா இனத்தைச் சேர்ந்த கால்நடை மேய்க்கும் தொழிலாளி ஒருவர், தனது கால்நடைகளுக்கு தண்ணீர் காட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த குக்கா என்ற மற்றொரு சமூகத்தை சேர்ந்த நபருக்கும், அவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த கிரெடா இன நபர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குக்கா சமூகத்தை சேர்ந்தவரின் காலில் சுட்டார். இதனால் ஆத்திரமடைந்த இரு சமூகத்தினரும் ஆயுதங்களுடன் திரண்டு வந்து ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். இரு தரப்பும் மாறி மாறி துப்பாக்கியால் சுட்டு கொண்டதில், சம்பவ இடத்திலேயே 25 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்நாட்டு பாதுகாப்புப் படையினர், வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.