சசிகுமார், சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் புதிய படம் டெத் இரயில்வே’
Share
இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘டெத் இரயில்வே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சசிகுமார், சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ள இப்படத்தின் தலைப்பு முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1944-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் ராணுவம் இந்தியாவுக்குள் நுழைவதற்கான முயற்சியில், பர்மா – தாய்லாந்து இடையே ரயில் பாதை அமைக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களை மையமாகக் கொண்டு ‘டெத் ரயில்வே’ உருவாகியுள்ளது. போர்க்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களையும், அந்த ரயில் பாதை அமைப்பின்போது நிகழ்ந்த துயரங்களையும் மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ளது. வெளியான முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள போர்க்கால காட்சிகளும், படத்தின் உருவாக்கமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜே. கமலகண்ணன் தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, பவானி ஸ்ரீ, கிஷோர், சிவதா, சேயோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் தலைப்பு முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. வரலாற்றுச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.













