LOADING

Type to search

சினிமா

மன்சூர் அலிகான் நடித்த திரைப்படம் 34 ஆண்டுகளுக்கு பிறகு மறு வெளியீடாகிறது

Share

மன்சூர் அலிகான் நடித்த ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ திரைப்படம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. மன்சூர் அலிகானுக்கு திருப்புமுனையாக அமைந்த ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவரது அதிரடி அரசியல் வசனங்களுடன் 1993-ல் ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ திரைப்படம் வெளியானது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபீஸில் 100 நாட்களைக் கடந்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்தின் மூலம் மன்சூர் அலிகான் முதன்முறையாக கதாநாயகனாக களம் இறங்கினார். அதுமட்டுமின்றி, அவரே இப்படத்திற்கு பாடல்கள் எழுதி, இசையமைத்து, தனது ‘ராஜ் கென்னடி திரைப்பட நிறுவனம்’ மூலம் தயாரித்தும் இருந்தார். இத்திரைப்படத்தை பாலு ஆனந்த் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான தங்கர் பச்சன், இப்படத்தின் மூலமே ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்திற்கு சாகுல் சண்டைப் பயிற்சியையும், புலியூர் சரோஜா, சிவசங்கர், சலீம்பாபு மற்றும் சம்பத்ராஜ் ஆகியோர் நடனப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர். இப்படத்திற்கான மக்கள் தொடர்புப் பணிகளை கோவிந்தராஜ் கவனித்துள்ளார். இப்படத்தில் மன்சூர் அலிகானுடன் இணைந்து நந்தினி, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, வடிவுக்கரசி, அபிலாஷா, ஷர்மிளி, நாகேஷ், வி.கே.ராமசாமி, நெப்போலியன், ஜெய்கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன், ஆர்.சுந்தரராஜன், குண்டு கல்யாணம், ஒருவிரல் கிருஷ்ணாராவ், குள்ளமணி, கள்ளபார்ட் நடராஜன், டி.கே.நடராஜன், பாண்டு, நெல்லை சிவா, போண்டா மணி என 50-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். மன்சூர் அலிகான் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அப்போது மிகப்பெரிய அளவில் ரீச் ஆகின. ஸ்வர்ணலதா, வாணி ஜெயராம்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு, தற்போதுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒலி வடிவமைப்புடன் இப்படம் ஜனவரியில் மீண்டும் திரைக்கு வரவுள்ளதால், சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.