இயக்குநர் ரவிக்குமாரின் ‘சூரி 07’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியது
Share
இயக்குநர் ரவிக்குமாரின் ‘சூரி 07’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியது. ‘விடுதலை’, ‘கருடன்’, ‘மண்டாடி’ ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சூரியின் ஏழாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற தரமான சயின்ஸ் பிக்சன் திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர். ரவிக்குமார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இப்படத்தைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றனர். தற்காலிகமாக ‘சூரி 07’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஜிஷா விஜயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பிரம்மாண்ட தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தனர். படத்தின் அறிவிப்பு பதாகையுடன் வெளியான ‘வெள்ளத்தைத் தொடர்ந்து இரத்தம் என்ற அதிரடியான வாசகம், இது ஒரு எமோஷனல் மற்றும் ஆக்ஷன் த்ரில்லர் பாணி கதையாக இருக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் முறையான முழுநேர படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.













