LOADING

Type to search

சினிமா

விஜய் ஆண்டனியின் பாசப்போராட்ட திரைப்படம் “அப்பாக்குட்டி”

Share

விஜய் ஆண்டனியின் பாசப்போராட்ட திரைப்படம் “அப்பாக்குட்டி” / பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி, லிதன்யா, ஜென்சன் திவாகர், அருவி மதன், பகவதி பெருமாள் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அப்பாக்குட்டி”. தனது மகளின் வாழ்வுக்காக எந்தத் துணையுமற்ற விஜய் ஆண்டனி ஊட்டியில் மகளோடு வாழ்கிறார். மகளுக்கு திடீரென ரத்த அணுக்கள் பாதிப்பு நோய் ஏற்படுகிறது. அதன் சிகிச்சைக்காக சென்றபோது தான் அந்தக் குழந்தை விஜய் ஆண்டனியின் குழந்தை இல்லை என தெரியவருகிறது. மேலும் குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமானால் குழந்தையின் உண்மையான பெற்றோர் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சூழல் உருவாகிறது. ஆனால் குழந்தையின் பெற்றோர்கள்  பிரிந்து வேறுவேறு திருமணம் செய்து கொண்டவர்கள். குழந்தையின் உயிரைக்காப்பாற்ற விஜய் ஆண்டனி குழந்தையின் பெற்றோரிடம் மன்றாடுகிறார். முடிவில் விஜய் ஆண்டனியின் பாசப்போராட்டம் வென்றதா என்பதே மீதிக்கதை. விஜய் ஆண்டனி அப்பாவாக அநேக இடங்களில் ஈர்க்கிறார். அவரின் இயல்பான சாந்தமுகம் பல எதார்த்தமான காட்சிகளுக்கு கைகொடுக்கிறது. குழந்தையை காப்பாற்ற அவர் பல அவமானங்களையும் அடி உதைகளையும்  வாங்குகின்ற காட்சியில் ஒரு உண்மையான தந்தையின் உணர்வுகளை நம் கண்முன்னே காட்டுகிறார். சாகக்கிடக்கும் மகளை காப்பாற்ற ஒரு தந்தை படும்பாட்டை,  படம் பார்த்துக் கொண்டிருக்கும் தந்தைமார்களின் கண்களை ஈரப்படுத்தி விடுகிறார் விஜய் ஆண்டனி. உச்சக்கட்ட காட்சிகள் அனைத்தும் விஜய் ஆண்டனியின் ஆளுமைக்குள் வந்துவிடுகிறது. இப்படத்தில் அவர் நடிக்கவில்லை. ஒரு தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். ப்ரீத்தி அஸ்ராணி கதையில் மிக முக்கியமான பங்கை ஆற்றியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக வரும் சிறுமி சிறப்பாக நடித்துள்ளார். அருவி மதன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பிற நடிகர்கள் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி அருமையான இசையை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளரின் உழைப்பு படத்தில் நன்றாக வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. படதொகுப்பாளர் திரைக்கதையை சிறப்பாக செய்துள்ளார். மிகவும் சிக்கல் நிறைந்த கதையை மிகத்திறமையாக கையாண்டுள்ளார் இயக்குநர் மு.மாறன். பெற்ற குழந்தையை காப்பாற்ற கணவன் கட்டிய தாலி தடையாக இருந்தால், அந்த தாலியை கழட்டி வீசுவதில் தவறில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார் இயக்குநர் மு.மாறன்.