ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது
Share
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’ அறிக்கையில் ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வெளியீடானது, ஆசியாவில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் நிகழ்வுகளில் செல்வாக்கு செலுத்தும் மற்றும் பிராந்திய சூழலை வடிவமைக்கும் நாடுகளின் திறனை மதிப்பிடும் குறியீடாகும். இது பொருளாதாரத் திறன், ராணுவத் திறன், மீள்திறன், எதிர்கால வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்புகள், ராஜதந்திர செல்வாக்கு மற்றும் கலாச்சார செல்வாக்கு ஆகிய 8 அளவுகளைப் பயன்படுத்துகிறது. இந்த அறிக்கையின்படி, இந்தியா மொத்தம் 40.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.5 புள்ளிகள் அதிகமாகும். 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றதன் மூலம், ஆசிய பிராந்தியத்தில் ‘முக்கிய வல்லரசு’ என்ற அந்தஸ்தையும் இந்தியா பெற்றுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதல் 2 இடங்களில் உள்ள நிலையில், இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சக்தி இடைவெளி கடந்த 2018-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போது மிகக் குறைந்த அளவிற்கு வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி, ராணுவத் திறன் மற்றும் சர்வதேச அளவிலான ராஜதந்திர உறவுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றமே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.













