LOADING

Type to search

உலக அரசியல்

இந்தோனேசியாவில் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது

Share

இந்தோனேசியாவில் பிரபல மிட்டாய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 34 தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இந்தோனேசியாவின் பான்டென் மாகாணம் சிகாண்டே பகுதியில் ‘யுனை டெட் பேமிலி புட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘பி.டி. பொனுசா அகுங்முலியா’ என்ற பிரபல மிட்டாய் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பிரபலமான ‘மில்கிடா’ மிட்டாய் மற்றும் நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலையில் சுமார் 300 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தொழிற்சாலையின் ஒரு கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ கட்டிடம் முழுவதும் மளமளவெனப் பரவியதால், உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர். எனினும் இந்த தீ விபத்தில் 3 பேர் பலியாகி இருந்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் பலர் 90 சதவீத அளவில் தீக்காயம் அடைந்திருந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மேலும் 21 பேர் உயிரிழந்தனர். இதனால் தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. தீயின் தீவிரத்தால் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளதால், உறவினர்களிடம் டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு காவல்துறை மருத்துவமனையில் சோதனை நடைபெற்று வருகிறது.