அடுத்தவர்களுக்கு வழிவிடும் பண்பை எமது தலைவர்கள் பறவைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
Share
‘இலங்கைப் பட்சிகள்’ நூல் வெளியீட்டு விழாவில் பொ ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
வலசைப் பறவைகள் நெடுந்தூரம் பயணிக்கும்போது காற்றைக் கிழித்துக் கொண்டு முன்னேறுவதற்கு வசதியாக அம்புமுனை வடிவில் அணிவகுத்துப் பறக்கின்றன. அந்த அணிவகுப்புக்குத் தலைமை வகித்து முன்னணியில் பறக்கும் பறவை நீண்ட தூரம் சென்று களைப்படையும்போது தானாகவே பின்தங்கி, பின்தொடர்ந்து வரும் அடுத்த பறவையைத் தலைமையேற்க வழிவிடும். ஆனால், எமது தலைவர்களோ இறுதி மூச்சுவரை தலைமைப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க ஆசைப்படுகிறார்கள். இந்தப்போக்கு மாறி, அடுத்தவர்களுக்கு வழிவிடும் உயர்ந்த தலைமைத்துவப் பண்பை எமது தலைவர்கள் பறவைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்
கலாநிதி கஜவதனி பார்த்தூரன், கலாநிதி அபிராமி சிவரூபன் இணைந்து எழுதிய ‘இலங்கைப் பட்சிகள்’ நூலின் வெளியீட்டு விழா 25ம் திகதி அன்று புதன்கிழமை (25.11.2026) ஹம்சியா மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் தகைசார் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு பொ. ஐங்கரநேசன் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சில பறவை இனங்கள் குறிப்பாக புறாக்கள், கொக்குகள் ஆகியன ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இரண்டும் மாறி மாறி முட்டைகளை அடைகாக்கின்றன. பெண் பறவை இரைதேடச் செல்லும்போது ஆணும், ஆண் பறவை இரைதேடச் செல்லும்போது பெண்ணும் முட்டைகளையும் குஞ்சுகளையும் கவனமாகப் பாதுகாக்கின்றன. இரண்டு பறவைகளுமே குஞ்சுகளுக்கு இரையூட்டுகின்றன. இயற்கையில் பறவைகளிடம் காணப்படும் இந்த உயரிய கூட்டுப் பொறுப்புணர்வும்; நாம் பறவைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இன்னுமொரு பாடமாகும்.
அன்னப்பறவைகள், இருவாட்சிப் பறவைகள், புறாக்கள் ஆகிய பறவை இனங்கள் குடும்ப இலக்கணத்துக்கு உதாரணங்களாக விளங்குகின்றன. இவை தம் வாழ்நாள் பூராகவும் ஒரே துணையோடு இணை பிரியாமல் வாழ்கின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் அவை தம் துணையை விட்டுப் பிரிந்து செல்வதில்லை. அற்ப கருத்து வேறுபாடுகளுக்கும், முரண்பாடுகளுக்கும் விவாகரத்துக் கேட்கும் எம் மக்கள் பறவைகளிடம் இருந்து இந்த உன்னதமான இல்லற மாண்பையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
பறவைகள் மட்டுமல்; ஒட்டுமொத்த இயற்கையுமே எங்களுக்கு ஏராளமான பாடங்களைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன. எந்தச் சத்தமும் இல்லாமல் மௌனமாக அது போதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாமோ உலகின் இரைச்சல்களுக்குள் சிக்கி அந்த மௌன மொழியைக் கேட்கத் தவறுகிறோம். இயற்கையே சிறந்த பேராசான். அந்தப் பேருண்மையை ஏற்று அதன் போதனைகளின்படி நடந்தால் வழிதவறாப் பயணிகளாக எப்போதும் எம் வாழ்வு சிறக்கும் என்றும் குறிப்பிட்டார்.













