LOADING

Type to search

கதிரோட்டடம்

மீண்டும் ஒரு தடவை எழுந்து நின்று ‘கர்ச்சித்த’ எமது ‘நீதித்துறை சிங்கம்’ இளஞ்செழியன் அவர்கள்

Share

கதிரோட்டம் 09-02-2024

இலங்கையின் நீதித்துறையில் சில தமிழ் பேசும் ‘சிங்கங்கள்’ தங்கள் பெயரைப் பதித்துச் சென்றுள்ளார்கள் என்பது பலபேருக்குத் தெரியாது. குறிப்பாக எமது விடுதலைப் போராட்ட வரலாற்றோடு அக்கறையும் விசுவாசத்தையும் மனதில் கொண்டு பயணிப்பவர்களுக்கு இந்த விடயங்;கள் நன்கு புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.

மிக அண்மையில் கடந்த வருடத்தின் இறுதியில் கொக்குத் தொடுவாய் புதைகுழிகள் விவகாரத்தில் காவல்துறையின் தவறுகளைக் கண்டித்தும் இனவாதப் போக்கு கொண்ட சிங்கள் அரசியல்வாதிகளை நிராகரித்தும் தன் பணியை துணிச்சலாகச் செய்து தொடர்ந்து அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக இலங்கையை விட்டு நீங்கிச் சென்ற மதிப்பிற்குரிய நீதிபதி சரவணராஜா அவர்களைப் போன்றும் தொன்னூறுகளில் யாழ்ப்பாண நீதி மன்றத்தில் தான் நீதிபதியாகக் கடமையாற்றி போது.

கோட்டையிலிருந்து அடிக்கடி துப்பாக்கிப் பிரயோகம் செய்;து அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த ‘இராணுவக் கொடியவர்களை கோட்டைக்குள் சென்று கைது செய்து கொண்டு வாருங்கள்’ என்று உத்தரவுகள் பிரபித்த துணிச்சலான நீதித்துறை சார்ந்து பணியாற்றிய நீதிபதி கதிரவேற்பிள்ளை (இவர் நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்)😉, அவர்கள் வழியில் மற்றுமொரு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் எமது ‘நீதித்துறை சிங்கம்’ அவர்களும் கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக இவ்வாறான துணிச்சல் மிகுந்த தீர்ப்புக்களையும் உத்தரவுகளையும் வழங்கும் ஒருவராக இருப்பதும் எமது தாயகத் தமிழர்களுக்கும் நீதிக்காக அலைபவர்களுக்கும் காப்பாகவும் விளங்குகின்றார் என்றால் அது மிகையாகாது.

நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் கடந்த காலங்களில் பல வழக்குகள் தனக்கு முன்னாள் விசாரணைகளுக்கு வருகின்றபோதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் குற்றஞ் செய்தவர் ‘எந்தக் கொம்பனாக இருந்தாலும்’ அவனுக்கு நீதி என்பது பொதுவானது என்ற கோட்பாடுகளுக்கு ஏற்ப தீர்ப்புக்களை வழங்குவதும், பின்னர் தொடர்ச்சியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதுமாக தமிழ் மக்களின் உண்மையான பாதுகாவலான தொடர்ந்தும் பிரகாசித்து வருகின்றார் என்பதை எமது வாசகர்களுக்கு எடுத்துரைப்பதே இவ்வாரக் கதிரோட்டத்தின் நோக்கமாக தெரிவு செய்தோம்.

இவ்வாறாக நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் தீர்ப்புக்களால் மன அழுத்தங்களுக்கு உள்ளான பல இராணுவக் கொடியவர்கள் தண்டப் பணம் செலுத்திய பின்னர் பணியிலிருந்து விலகியும் சென்றுள்ளனர் என்பதும் அவரது தீர்ப்புக்கு கிட்டிய வெற்றிகளே என்று நாம் கருத வேண்டும்.
இந்த பக்கத்தை எழுதத் தொடங்குவதற்கு முன்னர் எமக்கு வவுனியாவிலிருந்து எமது ஆசிரிய பீடத்திற்கு வந்த செய்தியொன்றில் ‘நீதித்துறை சிங்கம்’ இளஞ்செழியன் அவர்களது தீரமிக்க தீர்ப்பு ஒன்றைக் கண்டு நாம் மெய்சிலிர்த்தோம். அதை எமக்கு அனுப்பி வைத்த மன்னார் செய்தியாளருக்கு எமது நன்றி!.

மேற்படி வவுனியா நீதிமன்றச் செய்தியின்படி. 2006 ஆம் ஆண்டு தமிழ் இளைஞனொருவர் காணாமல் போனமைக்கு ஓமந்தை கட்டளைத் தளபதி பொறுப்பாளி எனவும், வன்னி பிராந்திய தளபதி உயர் அதிகாரி என்ற முறையில் அவரும் பொறுப்பாளி எனவும், இலங்கை இராணுவத் தளபதி, இலங்கை இராணுவ கட்டமைப்பின் தளபதி என்ற வகையில் பொறுப்பாளி எனவும் எமது ‘நீதித்துறை சிங்கம்’வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கடந்த புதன்கிழமையன்று 7ம் திகதி தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் ஓமந்தை கட்டளைத் தளபதி குறித்த இளைஞன் காணாமல் போனமைக்கு பொறுப்பாளி எனவும், இதே போன்று இலங்கை இராணுவ கட்டமைப்பின் தளபதி என்ற வகையில் அவரும் பொறுப்பாளி எனவும், தீர்ப்பளித்து 03.06.2024 இற்கு முன் இளைஞனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு முன்னிலைப்படுத்த தவறின் 03.12.2024 முதல் 3 தளபதிகளும் ஒன்றாக இளைஞரின் தாயாருக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்..
இவ்வாறான தீரச்செயல்களை நாம் வியந்து பாராட்ட வேண்டும். இதில் தொடர்புடை நீதிபதிகள் மற்றும் உத்யோகத்தர்கள் அனைவரும் சகல நலன்களும் பெற்று வாழவும் அவர்கள் பணிசெய்யவும் பிரார்த்தனைகள் செய்யவும் வேண்டும். இது எம் அனைவரதும் கடமை என்பதையும் நாம் உணரவேண்டும்!