தொடர் தாக்குதலில் ரஷ்யா – உக்ரைன் இருளில் மூழ்கியது
Share
உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. மேலும் அந்த நாட்டின் பல பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்து தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது. இதனிடையே நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை கைவிட்டால் உக்ரைனில் போரை நிறுத்த தயார் என ரஷிய அதிபர் சமீபத்தில் தெரிவித்தார். மற்றொரு புறம் உக்ரைன் போர் தொடர்பாக சுவீடனில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாட்டில் போரை நிறுத்தக்கோரும் ஒப்பந்தத்தில் 80-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன. இந்த நிகழ்வுகள் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தந்தன. ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக ரஷியா உக்ரைன் மீதான தாக்குதல்களை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் உள்ள மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா சரமாரியாக டிரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக தலைநகர் கீவ் உள்பட உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. இதனால் பல லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் இயங்காமல் போயின. இதனால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரஷியாவின் தாக்குதல்களால் அடிக்கடி மின்இணைப்பு துண்டிக்கப்படுவதால் ‘ஜெனரேட்டர்கள்’, ‘பவர்பேங்’ மற்றும் ‘பிளாஷ்லைட்’ ஆகியவற்றின் உதவியுடன் வாழ பழகி வருவதாக உக்ரைன் மக்கள் கூறுகின்றனர்.