LOADING

Type to search

இலங்கை அரசியல் மலேசிய அரசியல்

இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?

Share

-நக்கீரன்

கோலாலம்பூர், செப்.24:

இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித்த அனுர குமார திஸ்சநாயக அதிபராக பதவியேற்றிருக்கிறார்.

மதவாதமும் இனப் பேரினவாதமும் கலந்த அரசியலை முன்னெடுப்பதில் சளைக்காத இலங்கைக்கு, வலச்சாரி அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் சிறுபான்மை மக்களை எப்படி நசுக்குவது என்பது பற்றியும் அமெரிக்கா-ஜெர்மனி-பிரான்ஸ் உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் கீழ்த்திசை நாடுகளுக்கும் பாடம் நடத்தக்கூடிய முழுத் தகுதியும் உண்டு.

உலகெங்கும் ஜனநாயகம் மலர்ந்தபின், இந்தியாவை இந்திரா காந்தியும் இங்கிலாந்தை தாட்சரும் ஆளுவதற்குமுன்பே, ஒரு பெண் நாடாண்ட நன் வரலாறும் இலங்கைக்கு உண்டு.

மலேசியாவின் தேசிய மொழியான மலாய் மொழியைப் பேசும் மலாயரும் அங்கு வாழ்கின்றனர் என்பது இன்னொரு சிறப்பு; இந்தோனேசியாவும் மலாயாவும் டச்சுக்காரர் ஆட்சியில் இருந்த காலத்தில், இந்தோனேசியாவில் இருந்து அதிகமானோர் குறிப்பாக மேட்டுக்குடியினர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.

பின்னர் வந்த ஆங்கிலேயர் டச்சுக்காரர்களை மடக்கி தங்கள் ஆதிக்கத்தை 1796-இல் இந்த மண்டலத்தில் நிலைநிறுத்தியபின் மலாயாவைச் சேர்ந்த அதிகமான மலாய் மக்களை பிரிட்டிஷ் அரசு இலங்கையில் குடியமர்த்தியது.

இலங்கை தேசிய நீரோட்டத்தில் பங்குபெறாமல் பட்டும்படாமலும் தொட்டும் தொடாமலும் ஒதுங்கி நிற்கின்ற மலாய் மக்களில், விளையாட்டு உட்பட பல்துறைகளில் சாதனை புரிந்தோரும் உண்டு. பல்வேறு காரணங்களால் இலங்கை மலாயரின் எண்ணிக்கை குறைந்தும் சரிந்தும் தற்பொழுது ஏறக்குறைய 44ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளது. இவர்கள் பேசும் மலாய் மொழியில் தமிழும் சிங்களமும் பேரளவில் கலந்து கலப்பு மலாயாக தற்பொழுது மாறி இருக்கிறது.

மலேசியாவின் முதல் பிரதமரும் தேசத் தந்தையுமான துங்கு அப்துல் ரகுமான், இலங்கைக்கு அலுவல் பயணம் மேற்கொண்ட நேரத்தில் அந்த நாட்டின் பெயர் சிலோன். அப்போது, இலங்கைவாழ் மலாய் மக்களைப் பார்த்து பெருமை அடைந்ததுடன் மெல்லியதாக பொறாமையும் கொண்டதாக சொல்லப்படுகிறது.

சுதந்திர மாலாயாவைவிட, சுமார் 50 ஆண்டுகள் அளவுக்கு சிலோன் பொருளாதார அளவில் வளர்ந்திருந்தது. ரத்தினக் கற்கள், ஏலம், பட்டு, தேயிலை உற்பத்தியில் முன்வரிசையில் இருந்த அந்நாளைய இலங்கையின் வருமானத்தில் ஏற்றுமதி பெரும்பங்கு வகித்தது.

தான் வளர வேண்டும் என்பதைவிட, இந்தியாவை எப்படியெல்லாம் கீழறுக்கலாம் என்பதிலேயே காலத்தையும் ஆற்றலையும் விரயமாக்கிய பாகிஸ்தானைப் போல, தமிழரை எப்படியெல்லாம் ஒடுக்கலாம் அழிக்கலாம் என்பதிலேயே குறியாக இருப்பதால், இலங்கை இன்று இந்தக் கீழான நிலைக்கு வந்துள்ளது. சொந்த அதிபரையே நாட்டைவிட்டு விரட்டும் அளவுக்கு இலங்கையின் பொருளாதாரம் தரைதட்டி நின்ற வரலாற்றை அண்மையில் பார்த்தோம்.

தற்பொழுது, இலங்கை அரசியல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது!

கல்லூரி காலத்திலேயே அரசியல் தாக்கம்பெற்ற அனுர குமார திஸ்சனாயக, ஜனதா விமுக்தி பெரமுனா-ஜேவிபி என்னும் இடதுசாரி பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

இலங்கையின் இளைய சமுதாயத்தின் பேராதரவைப் பெற்ற ஜேவிபி இயக்கத்தின் தொடக்ககால அரசியல், தேர்தல் மற்றும் ஆட்சி அதிகாரம் குறித்ததாக இல்லை; ஆளும் தரப்பிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பாரிய அளவில் களகத்தையும் போராட்டதையும் முன்னெடுத்தது.

இதை, கொள்கை அளவிலோ அல்லது அரசியல் சீர்திருத்தம் என்ற அடிப்படையிலோ எதிர்கொள்ள திராணியற்ற இலங்கை ஆட்சியாளர்கள், ஜேவிபி இயக்கத்தினரை வேட்டையாட ஆரம்பித்தனர்.

ஜேவிபி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்மீது நள்ளிரவுகளில் வேட்டை நடத்தப்பட்டது. காவல் துறையைக் கொண்டு சமாளிக்க முடியாமல் இராணுவத்தினரின் துணைகொண்டு வளைக்கப்பட்ட ஜேவிபி இயக்கத்தின் இளைஞர் பட்டாளம் காணாமல் போனது; கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்டோரின் உடல்கள் நீர்நிலைகளில் மிதந்தன. உடல் பாகங்கள் ஆங்காங்கே கிடந்தன.

இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகளை சமாளிக்க முடியாமல் திணறிய அரசுக்கு வேறுவழி தெரியவில்லை. அதனால்தான், சிங்கள இளைஞர்களாக இருந்தாலும் ஜேவிபி-யினரை அழிக்கும் நடவடிக்கையில் கூசாமல் இறங்கின இலங்கை அரசுகள்.

21-ஆம் நூற்றாண்டு தொடங்கிய காலக்கட்டத்தில் சற்று பதுங்க ஆரம்பித்த ஜேவிபி இயக்கம், மெல்லமெல்ல தன் போராட்ட குணத்தை மாற்றிக் கொண்டு, புதுச் சாயம் பூசிக்கொண்டு அரசியலில் ஈடுபட ஆரம்பித்தது.

தமிழ் நாட்டின் சாதி சங்கங்களுள் ஒன்றான வன்னியர் சங்கம், தன் வாக்குறுதியை மீறி அரசியலில் ஈடுபட முனைந்தபோது, பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் எப்படி புதுவண்ணம் பூசிக் கொண்டதோ அதைப்போல ஜேவிபி-யும் தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் தன்னை புதுப்பித்துக் கொண்டு பதவி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டது.

இந்த இயக்கத்தின் சார்பில் கடந்த அதிபர் தேர்தலிலும் களம் கண்ட அனுர குமார திஸ்சநாயக, படுதோல்வி அடைந்தார். அதிபர் தேர்தலில்தான் இப்படியென்றால், நாடாளுமன்றத் தேர்தலில்கூட இந்தக் கட்சிக்கு 225 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் வெறும் மூன்றே உறுப்பினர்கள் மட்டுமே வென்றனர்.

இந்த நிலையில், தற்பொழுது நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மூவரில் முதல் இடத்தைப் பெற்று அதிபராகி இருக்கிறார் அனுர குமார திஸ்சநாயக.

இவரின் அரசியல் பயணம், மத வாதம் சார்ந்ததாக இல்லை என்பது உண்மைதான். அந்த வகையில் இலங்கை நாட்டின் அதிகாரப்பூர்வ மதமான பௌத்தம் சார்ந்து இல்லாமல், பொதுவுடைமை சிந்தனைகொண்ட இடச்சாரி அரசியல் சார்ந்ததாக அமைந்தது.

அதனால், இவர் முழு ஜனவாதியாக விளங்குவார் என்றும் இலங்கை அரசியலில் புதுப்பாங்கு பூக்கும் எனவும் ஈழத் தமிழர் சிக்கலுக்கு பொருத்தமான தீர்வு காண்பார் என்றும் எவராவது எதிர்பார்த்தால், நிச்சயமாக அதில் தவறிருக்காது என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் உள்ளது.

காரணம், அனுர குமார திஸ்சனாயக, மதவாதியாக இல்லையே தவிர, இனவாதியாக இல்லை என்பதை ஆரம்ப நாட்களில் சொல்லிக் கொண்டிருந்தாலும் எதிர்காலம் எப்படி இருக்குமோ இஸ்லாமியர்களும் தமிழர்கள் சிந்திக்கின்றனர். இலங்கையில், தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு அல்லது குறைந்தபட்ச அதிகாரப்பரவலுக்கு வழிவகுக்கும் 13-ஆவது சட்டத் திருத்தத்தை அடியோடு எதிர்த்தவர் இந்த அனுர குமார திஸ்சநாயக.

ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில், இலங்கை அரசியல் சாசனத்தின் 13-ஆவது சட்டத்திருத்தம் பிரசித்தி பெற்றது; புது டில்லி வரை பிரதிபலித்தது. இலங்கையின் பேரினவாத அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடுவர் பணியாற்றிய நோர்வே நாட்டு அரசதந்திரி எரிக் சோல்ஹைம், இந்த 13-ஆவது சட்டத்திருத்த அமலாக்கம் குறித்து அதிகமாக முயற்சித்தார்.

தவிர, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கையின் முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனாவும் விடுதலைப் புலிகளை ஒதுக்கிவைத்து, ஒருதலைப்பட்சமாக இவ்விருவரும் ஏற்படுத்திக் கொண்ட இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தையும் இதே அனுர குமார திஸ்சநாயக ஏற்கவில்லை; போதாக்குறைக்கு எதிர்க்கவும் செய்தார்.

அரசியல் குள்ளநரி ஜெயவர்த்தனெவும் அரசியல் முதிர்ச்சியில்லாத நிலையில் தமிழர் விரோதப் போக்கைக் கொண்ட ஜே.என். தீட்சித் போன்ற அதிகாரிகளின் வஞ்சகமொழிக்கும் ஆட்பட்ட ராஜீவ் காந்தியும் செய்துகொண்ட இந்த அமைதி ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தனிக்கதை.

1970-ஆம் ஆண்டுகளில் பண்டார நாயக அரசுக்கு எதிராக ஜேவிபி நடத்திய போராட்டத்தால் பல்லாயிரக் கணக்கானோர் இறந்தனர்; அதைப்போல, இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக, 1987-89 காலக்கட்டத்தில் ஜேவிபி சார்பில் அனுர குமார திஸ்சநாயகெ முன்னின்று நடத்திய கலவரத்தாலும் ஆயிரக் கணக்கானோர் மடிந்தனர். இவற்றைச் சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம்தான் அனுர பிற்காலத்தில் மன்னிப்புத் தெரிவித்தார். அந்த நேரத்தில் ஜேவிபி இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்று இருந்ததால், இவ்வாறு மன்னிப்பு கேட்டார்.

தற்பொழுது, இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனெ பதவி விலகியுள்ள நிலையில் புதிய பிரதமரை உடனே நியமிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார் அனுர குமார திஸ்சநாயக. காரணம், நாடாளுமன்றத்தில் அனுர குமார திஸ்சநாயகெவிற்கு கொஞ்சமும் வலுவில்லை; ஆதரவுமில்லை. தேசிய மக்கள் சக்தி கட்சி என்னும் முகமூடியை மாட்டிக்கொண்டுள்ள ஜேவிபி-க்கு மூன்று எம்பி-க்கள் மட்டுமே உள்ளதால், மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எவரோ ஒருவரைத்தான் பிரதமராக நியமிக்க வேண்டிய அவசியம் அனுராவுக்கு நேர்ந்துள்ளது.

225 எம்பிக்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் மூலம் 196 பேர் தேர்ந்தெடுக்கப்படும் வேளையில், கட்சிகளின் வாக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் 29 பேர் நியமிக்கப்படுவர்.

இன்றைய நிலையில், அனுர குமார திஸ்சநாயகவிற்கு இருக்கும் ஒரேவழி, இன்னும் ஒன்றரை மாதத்தில் நடப்பு நாடாளுமன்றத்தைக் களைத்துவிட்டு, புதியத் தேர்தலுக்கான ஆணையைப் பிறப்பிப்பதுதான்; அதற்கான அதிகாரம் பெற்றுள்ள அனுர, அதைத்தான் செய்யக்கூடும்.

அப்படி விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற்று, அதன்பின் அமையக்கூடிய புதிய நாடாளுமன்றத்தில்கூட அனுர குமார திஸ்சநாயகெவிற்கு பெரும்பான்மை கிடைக்குமா என்பதும் ஐயத்திற்குரியது; காரணம், அதிபர் தேர்தலில்கூட மிகப்பெரும்பான்மை ஆதரவில் அனுர குமார வெற்றிபெறவில்லை.

தட்டுத் தடுமாறி, 50 விழுக்காட்டிற்கு குறைவான ஆதரவுடன்தான் அதிபர் பதவியை எட்டியுள்ளார். அதனால், இவருடைய பதவிக் காலம் நிம்மதியாகவும் நிறைவாகவும் கடந்துசெல்லுமா என்பது கேள்விக்குரியது.

எது எவ்வாறாயினும், சொந்த இன மக்கள் பல்லாயிரம் பேர் மடிவதைக் கண்டு கொஞ்சமும் சஞ்சலப்படாமல் வன்முறைப் போராட்டங்களை முன்னெடுத்த இந்த அனுர குமார திஸ்சனாயக, ஈழத் தமிழர்மீது கரிசனம் காட்டுவார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

நக்கீரன் – Nakkeeran 013-244 36 24