அமெரிக்க போர் கப்பல்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
Share
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அமெரிக்க போர் கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏமன் கடற்பகுதி அருகே செங்கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தினர். 5 ஏவுகணைகள், 8 டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால், இந்த தாக்குதல்களை முறியடித்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் போர் கப்பல்களுக்கோ, வீரர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.