இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே திடீரென தீ
Share
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நெதன்யாகுவின் வீட்டிற்கு வெளியே திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குண்டுவெடிப்பு தாக்குதலா? என்பது உறுதி செய்யப்படவில்லை. இதுபற்றி போலீசார் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு கூட்டாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிரதமர் இல்லத்திற்கு வெளியே 2 முறை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவம் நடக்கும்போது, நெதன்யாகு மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி விசாரணை ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. இது ஒரு தீவிர விசயம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் கண்டனம் தெரிவித்ததுடன், பொதுவெளியில் வன்முறை அதிகரித்து இருப்பதற்கு எதிராக கடும் எச்சரிக்கையும் தெரிவித்து இருக்கிறார்.