சென்னையில் மனநலம் குன்றிய மாணவி பாலியல் வன்கொடுமை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Share
சென்னையில் மனநலம் குன்றிய மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த மனநலம் குன்றிய மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு ஸ்நாப்ஷாட் மூலம் சிலர் நண்பர்களாகி உள்ளனர். அவர்கள் மாணவியை தனியாக சந்திக்க வேண்டும் என்று கூறி அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான கொடுமை கடந்த ஓராண்டாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; “சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஏற்கனவே காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், திமுக அரசின் காவல்துறை வழக்கம் போல மிகவும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு புகாரளித்தவர்கள் அலைக்கழிக்கப்பட்டதால், இக்குற்றம் தொடர்ந்து நடைபெற்றதாக தகவல்கள் வருகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் வந்தால், அதன் தீவிரத்தன்மை உணர்ந்து, முறையாக விசாரிக்க வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் காவல்துறைக்கு தெரியாதா? பெண்களுக்கு குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படும் நிலையை உருவாக்கியதோடு மட்டும் அல்லாமல், பெண்களுக்கு எதிரான வழக்குகளை மெத்தனப் போக்குடன் கையாளும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இவ்வழக்கில் தொடர்புள்ள கயவர்கள் அனைவருக்கும் கடுமையான சட்டபூர்வ தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்கவும், அத்தகைய புகார்கள் மீது தாமதமின்றி தீவிர விசாரணை மேற்கொள்ளவும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.