ரஷியா போரில் 43 ஆயிரம் வீரர்கள் பலி, உக்ரைனுக்கு அமைதி வேண்டும் – ஜெலன்ஸ்கி உருக்கம்
Share
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. போரானது ஏறக்குறைய 3-ம் ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இரு நாடுகளும் போரை தீவிரப்படுத்தி உள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வரும் தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை இதில் பெரிய பலன் எதனையும் தரவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகின்றது. அந்நாடுகள் நிதி, ராணுவ உதவியை வழங்கி வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் நாட்டுக்கு சென்று அந்நாட்டு தலைவரான இம்மானுவேல் மேக்ரானை நேரில் சந்தித்து பேசினார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள டிரம்பும் பிரான்ஸ் சென்றுள்ளார். இந்நிலையில், ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறும்போது, உக்ரைனுக்கு நீடித்த அமைதி வேண்டும். கடந்த காலத்தில் அழிக்கும் செயலில் ஈடுபட்டது போன்று, வருங்காலத்தில் அமைதியை குலைக்கும் நோக்கில் ரஷியா ஈடுபடாத வகையிலான அமைதி மக்களுக்கு வேண்டும் என டிரம்பிடம் கூறினேன் என்றார். முடிவற்ற ஒன்றாக போர் இருக்க முடியாது. அமைதி ஒன்றே நிரந்தரம் மற்றும் நம்பத்தக்க ஒன்றாக இருக்கும் என கூறிய அவர், உக்ரைனின் 43 ஆயிரம் படை வீரர்கள் போரில் உயிரிழந்து உள்ளனர். 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து உள்ளனர் என கூறியுள்ளார். எனினும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் தயாராக இல்லை. அவர்கள் மறுத்து வருகின்றனர் என ரஷியா கூறி வருகிறது.