வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு: காவல்ரை தாக்கிய சீமான் காவலாளி கைது
Share

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 17-ந்தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் காவல்துறை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக கோரி சீமானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கேட்டு, காவல் நிலையத்தில் கடிதம் அளித்தார்.
இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கில், நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என கூறி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டினர். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நடிகை பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் போலீசார், சீமான் வீட்டில் சம்மன் ஒட்டியபோது, சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. அந்த சம்மனை கிழித்தது ஏன் என்று காவல்துறை விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்ற போது, திடீரென அவரின் காவலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சீமானின் காவலாளி காவல்துறையை தாக்கியதோடு கையில் இருந்த துப்பாக்கியையும் எடுத்து நீட்டியுள்ளார். இதன்பின் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற காவல்துறை, கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். காவலாளியின் கைகளில் இருந்த கை துப்பாக்கியையும் காவல்துறை பறிமுதல் செய்தனர்.