LOADING

Type to search

இந்திய அரசியல்

மக்களவை, மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளி

Share

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. குறிப்பாக அதில் இடம்பெற்று உள்ள மும்மொழிக் கொள்கை மூலம் தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி அந்த கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. இதனால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. இதில் மும்மொழிக் கொள்கை பிரச்சினை புயலை கிளப்பியது. திமுக எம்.பி.க்கள்-மத்திய கல்வி அமைச்சர் இடையே விவாதம் நடந்தது. அப்போது திமுக எம்.பி.க்கள் நேர்மையாக இல்லை. ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறார்கள். நாகரிகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு தி.மு.க. மற்றும் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். மேலும் மத்திய அமைச்சருக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார். இந்நிலையில், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சிக்கு கண்டனம் தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு உடை அணிந்து, பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து நாடளுமன்ற இரு அவைகளும் தொடங்கியது. அவை தொடங்கியதில் இருந்தே மக்களவையில், திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கம் எழுப்பினர். மேலும் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர். அதைபோல தொகுதி சீரமைப்பு, கல்வி நிதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த நோட்டீஸ் மீது விவாதம் நடத்த அனுமதி மறுத்ததால் மாநிலங்களவையிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.