நீட் தேர்வு விலக்கு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிசாமி கடும் வாக்குவாதம்
Share

தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், தமிழகத்திற்கு யார் ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் வந்தது என்ற விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், நீட் தேர்வில் நீங்கள் செய்த துரோகத்திற்கு தான் இந்த 11 மருத்துவக் கல்லூரியை ஒன்றிய அரசு அளித்தது என்றும், கணபதி ஐயர் பேக்கரி டீலிங் போல நீட் தேர்வை நீங்க வெச்சிக்கோங்க, நாங்க 11 மருத்துவக் கல்லூரி வெச்சிக்குறோம் என்றும் பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தான். அதை தடுத்து நிறுத்த முயற்சி செய்தது அ.தி.மு.க. ஆட்சி என்று பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அனுமதி அளித்தது உங்களின் ஆட்சி தான். கலைஞர் இருக்கும் போது நீட் வரவில்லை. அம்மையார் இருக்கும் போது நீட் தேர்வு வரவில்லை என்று பதில் அளித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, நீங்கள் 11 மருத்துவக் கல்லூரிகள் அறிவித்தீர்கள். ஆனால் அதனுடைய பணி 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தான் நடந்து இருந்தது என்றார். தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது, தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போதும் நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. அம்மையார் இருக்கும் போது கூட வரவில்லை. யார் இருக்கும் போது கொண்டு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்று பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு சிக்கலை சரி செய்ய உங்களுக்கு (அ.தி.மு.க.)நல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருப்போம் இல்லை என்றால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிபந்தனை விதிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தருவோம் என்று வாக்குறுதி அளித்தது நீங்கள் என்று தெரிவித்தார். அது மட்டுமல்ல நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டதே தி.மு.க. தான் என்று குற்றம் சாட்டினார். கடந்த தேர்தலின் போது நீட்டுக்கு விலக்கு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது நீங்கள் என்றும் சாடினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. வாக்குறுதி கொடுத்தது உண்மை தான், மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் விலக்கு பெற்றிருப்போம். ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு வரை நீங்கள் கூறும் போது 2031 வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறினீர்கள். தற்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து உள்ளீர்கள், யாரை ஏமாற்ற இந்த நாடகம் என்று கேள்வி எழுப்பினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. தீர்ப்பு வந்தால் தான் எதையும் செய்ய முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எப்படி செயல்பட முடியும் என்றார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு கேட்டு நீங்கள் மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவீர்களா? நிபந்தனை விதிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். இவ்வாறு சட்டசபையில் விவாதம் பரபரப்பாக நடந்தது.