LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கு: ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Share

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக உறுப்பினர் நரேஷ்குமார் மீது தாக்குதல் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “திமுக உறுப்பினரான ரவுடி நரேஷ் குமார் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நரேசை ஆயுதங்கள் கொண்டு யாரும் தாக்கவில்லை. படுகாயமடைந்ததாகக் கூறப்படும் நரேஷ், தனியாக மருத்துவமனைக்குச் சென்று 4 நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளார். பலத்த காயங்கள் இல்லை என மருத்துவ அறிக்கைகள் உள்ளன. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் இதுவரை கைப்பற்றப்படவில்லை” என்று தெரிவித்தார். இதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “விசாரணையில் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியது உறுதி செய்யப்பட்டது. அதனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 20 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். இதனைத்தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, “விசாரணையில் தான் சம்பவம் குறித்து முழுமையாகத் தெரிய வரும். அதனால், ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய முடியாது” என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என ஜெயக்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கைத் திரும்பப் பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.