LOADING

Type to search

சினிமா

தமிழ் சினிமாவில் மஹாகவி பாரதி பாடல்கள்…

Share

வீணை மைந்தன்

அத்தியாயம்;- 10+

ஒரு மகாகவியின் உடலென்ற பொருளை தீதின்று ஒரு நூறு ஆண்டுகளாகிவிட்டன. காலம் என்ற காலக்கடலில் கலந்து கழிந்தன. மேலும் ஒரு காலக்கவிஞன் எவ்வாறு ‘மகாகவி’ ஆனான் என ஆய்வு செய்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கீழ்க்கண்டவாறு பெருமிதம் கொள்கிறார்.

“வருஷ நதிகள், அவனது சமகால தோழர்களும், தொண்டர்களும், தலைவர்களும், ஐம்பூதங்களோடு ஐக்கியம் ஆகிப் போயின. ஆயினும் அவன் கவிதையாகிய உயிர்ப் பொருளை அழிப்பதற்கு ஐம்பூதங்களால் ஆகாது. காரணம், பாரதி கவிதைகள் காலத்தின் நித்தியங்கள்; கற்பனையை சற்றே தொட்டுக் கொண்ட சத்தியங்கள். அவை உடல் சார்ந்து வாழவில்லை. உண்மை சார்ந்து வாழ்கின்றன. ஒரு நற்கவிதை என்பது பழையது; புதியது என்ற காலப் பரிமாணம் கடந்தது; காற்று பழையதாயினும் உள்ளிழுக்கும் போதெல்லாம் உயிராற்றல் உருமாறுவது போல; சூரியன் பழையதாயினும் அதன் கிரன விரல்கள் நின்று கிச்சு கிச்சு மூட்டும் போதெல்லாம், கவன மொட்டுக்கள் கட்டவிழ் மாறுபோல, எழுதி நூறு ஆண்டுகள் கடந்த பின்னும் ஆவேசத்தோடு துடி துடிக்கின்றன! பாரதி பாடல்கள் வள்ளுவன் போன்ற உலகப் பொதுமையோ இளங்கோ போன்ற காப்பிய பெருமையையோ, கம்பன் போன்ற நாடகச் செழுமையோ பாரதிக்கு வாய்க்கவில்லையெனினும், பாரதியை அவர்தம் வரிசையில் வைத்து அழகு பார்க்க காலம் தயங்க வில்லையே! ஏன்?

மொழியால் தன் தேவையை ஈடு செய்து கொள்பவன் கவிஞன்!
மொழியால் காலத்தின் தேவையை ஈடு செய்பவன் மகாகவி!
பாரதி மகாகவி!
இப்பிரபஞ்சம் உள்ளவரை தமிழ் வாழும்!
தமிழ் வாழும் வரை பாரதியும் வாழ்வார்!
பாரதி என்ற ‘மகாகவி’ இப்பூவுலகில் ஒருவர் மட்டுமே என்பதையும் இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். அப்படி யாராவது ஒரு கவிஞர் நானும் ‘மகாகவி’ தான் என்று புனைப் பெயர் சூட்டிக் கொண்டால் அவர் அவரது சொந்த பெயராலே மட்டும் அறியப்படட்டும்; அறிமுகமாகட்டும்!

கடந்த வார இதழில் சங்கீத மேதை ஜி ராமநாதன் இசையமைத்த இறுதிப் படம் எது? அதில் இடம் பெற்ற பாடல் எது? என உங்களுக்கு அறியத் தருவதாக எழுதியிருந்தேன். ஆம்! அமரர். ஜி. ராமநாதன் அய்யா இசையமைத்து வெளியான, ‘இயக்குனர் திலகம்’ கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் கதை – வசனம் – எழுதி இயக்கி 1962-ல் வெளியான ‘தெய்வத்தின் தெய்வம்’ படம் தான் அந்தப் படமாகும்! இப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை குமாரி மணிமாலா. நன்றாக நடனம் பயின்றவர். ஏற்கனவே வேறு ஒரு மணிமாலா (திருமதி வெண்ணிற ஆடை மூர்த்தி) திரையுலகில் அறிமுகமாகி வலம் வந்ததால், குமாரி மணிமாலா பின்னாளில் தனது பெயரை கீதாஞ்சலி என மாற்றிக்கொண்டார்.

‘தெய்வத்தின் தெய்வம்’ படம் மூலம் அறிமுகமானாலும், அப்படத்தில் அவர் பாரதி பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடிய நடனமும், பின்னணி இசையும் என்றும் ரசிக்கக் கூடிய கலை காட்சியாகும்! ‘பாரதி’ பாடல் தொகுப்பில் ‘கண்ணன் என் காதலன்’ எனும் தலைப்பின் கீழ் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

‘கண்ணன் என் காதலன்’ 4 இலிருந்து 32 வரிகள் கொண்ட பாடல் வரிகளிலிருந்து 12 வரிகள் கொண்ட பாடலாக ஐயர் அவர்கள் மெட்டமைத்து இசையமைத்திருந்தார். பரத நாட்டியம் ஆடுவதாக அமைந்திருக்கும் அறிமுக நடிகை குமாரி (மணிமாலா) கீதாஞ்சலி பிரமாதமாக ஆடி இருந்தார்

இதோ மெட்டமைத்து பாடப்பெற்ற பாடல் வரிகள்…

“கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம் – பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்.

ஆற்றங்கரைதனில் முன்னர் ஒரு நாள் – எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவனென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம் (கண்ணன்)

நேரமுழுவதிலும் பாவி தன்னையே – உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒரு சொலின்று கேட்டு வந்திட்டால் – பின்பு
தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம் (கண்ணன்)

அடுத்து இயக்குனர் ராஜீவ் மேனன் படமாகிய ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் பாரதி ஐயாவின் மிக அழகிய பாடல்களில் சிருங்காரம் – அற்புதம் நிறைந்ததான ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது.

பாரதி ஐயாவின் ‘கண்ணம்மா என் காதலி’ எனும் தலைப்பில் இடம்பெற்ற பாடல் அது. படத்தில் இப்பாடலுக்கு நமது இசைப்புயல் தம்பி ஏ ஆர் ரகுமான் அற்புதமாக இசை அமைத்திருந்தார். ரம்மியமான காதல் ஜோடிகளான அழகி ஐஸ்வர்யாராய், அப்பாஸ் இணைந்திருப்பார்கள்.

பாடல் வரிகளுக்கேற்ப அழகி ஐஸ்வர்யா ராய் முக வடிவையும் – காதல் பொங்கும் விழி அசைவுகளையும் கண்டு கண்டு ரசித்தேன். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் திரு ஹரிஹரன் குரலோசை தென்றலும், நிலவும் கலந்து காற்றில் தவழ்ந்து வந்தது போலிருந்தது. எதையும் ரசித்து உள்வாங்கி விழிமூடி ஏகாந்தமாக சஞ்சரிப்பதற்கு ரசனை தான் முக்கியம்.
இதோ நீங்களும் பாரதியை காதலுடன் வாசியுங்கள்..
“…சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ!
வட்டக் கரிய விழி – கண்ணம்மா
வானக்கருமை கொல்லோ!
பட்டுக் கருநீலப் – புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் தெரியும்
நட்சத்திரங்களடி..!

சோலை மலரொளியோ – நீ உனது
சுந்தரப் புன்னகை தான்!
நீலக் கடலலையே – உனது
நெஞ்சின் அலைகளடீ!
கோலக் குயிலோசை – உனது
குரலினிமையடீ!
வாலைக்குமரியடி – கண்ணம்மா
மருவக்காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் – கண்ணம்மா
சாத்திர மேதுக்கடீ!
ஆத்திரம் கொண்டவர்க்கே – கண்ணம்மா
சாத்திரமுண்டோ டீ?
மூத்தவர் சம்மதியில் – வதுவை
முறைகள் பின்பு செய்வோம்,
காத்திருப்பேனடி! – இது பார்
கன்னத்து முத்தமொன்று!
(சுட்டும் விழிச்சுடர்)

ஒளிப்பதிவாளரும் இயக்குனருமாகிய ராஜீவ் மேனன் ஒளிஓவியம் – கலைவடிவம் அற்புதம்.

அடுத்த இதழில்…
‘முத்தமிழ் அறிஞர்’ கலைஞர் மு கருணாநிதி அவர்கள் பாரதி ஐயாவை விட அவரது தாசனான பாவேந்தர் பாரதிதாசன் புகழ் பாடுவார். ஆனால் கலைஞர் படத்திலும் பாரதி பாடல் இடம்பெற்றிருந்தது. அறிவீர்களா?
காத்திருங்கள்

வீணை மைந்தன்