‘நடிகர் திலகம்’ அவர்களின் உடன்பிறவா சகோதரி ‘பாரதரத்னா’ லதா மங்கேஷ்கரின் காந்தக் குரல் காற்றில் கலந்தது
Share
பெப்ரவரி 6 ஆம் நாள் இந்திய அரசின் சகல ராஜ மரியாதைகளுடன் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தனது 92வது வயதில் இசைக் குயிலின் தங்கக் குரல் காற்றலையில் சங்கமமாகியது.
உலகின் ஏதாவது ஒரு வானொலியில் எப்போதும் ஒரு குயிலின் ஓசை ஒலித்துக் கொண்டேயிருக்கும். இப்பெருமை எந்தப் பாடகிக்கும் கிட்டாத பெருமை. அந்த இந்தியக் குயிலின் பெயர் லதா மங்கேஷ்கர். 13 வயது மாணவியாகவிருந்த போது ஒலிக்கத் தொடங்கிய அவரது அமுதும் தேனும் கலந்த குரலோசை விண்ணுலகில் ஒலிப்பதற்காக பூவிலகிலிருந்து ஓய்வு பெற்று சென்றுவிட்டது.
உலகின் சாதனை படைத்த மெல்லிசைப் பாடகிகளுள் லதா மங்கேஷ்கர் முதன்மையானவர். பெருமை படைத்த மகாராஷ்டிர குடும்பத்தில் பிறந்து கடும் உழைப்பாலும் திறமையாலும், இசை புலமையாலும் முன்னேறி ஒப்பாரும் மிக்காருமின்றி புகழ் கொடி நாட்டிய இசைக்குயில் ஆவார்!

இந்தியா என்றால் நேருஜி – காந்திஜி – இந்திராஜி – ராஜ்கபூர் – சுந்தர் பிச்சை – அப்துல்கலாம் என்ற வரிசையில் அம்மையாரும் ‘லதாஜி’ என தனி இடத்தை இசையால் வசமாக்கியவர்!
இவ்வளவு பெருமை வாய்ந்த லதா அம்மையார், சிவாஜி அவர்களுக்கு உடன்பிறவா சகோதரி என்பது பலருக்கு தெரியாத விடயம். லதாஜி மாத்திரமல்ல அவருட்பட பிறந்த 5 சகோதரிகளும் சிவாஜி ஐயாவின் சகோதரிகள் தான். சிவாஜி ஐயா உயிருடன் வாழ்ந்த காலத்தில் (பம்பாய்) மும்பைக்கு எப்போது சென்றாலும் லதா மங்கேஷ்கர் சகோதரிகள் வீட்டு விருந்தாளியாக தவறாமல் செல்வதுண்டு.
அதேபோன்று சகோதரிகள் இருவரும் சென்னை வரும்போது அண்ணா என்று வாஞ்சையோடு ‘அன்னை இல்லம்’ வருவார்கள்..
சிவாஜி அய்யாவுடைய போக் ரோடு (செவாலியே சிவாஜி கணேசன் சாலை) இல்லத்தில் லதா சகோதரிகளுக்கென்று தனி விருந்தினர் விடுதி உண்டு. அவர்களுக்கான பிரத்தியேக டைனிங் டேபிள், மற்றும் சமாச்சாரங்களை சிவாஜி ஐயாவின் இல்லத்தரசி கமலா அம்மா சொல்லச் சொல்ல நேரில் பார்த்தவன் நான்.
“இங்கே தான் லதா உட்காருவா” என அவருக்குரிய நாற்காலியை சுட்டிக் காட்டினார்..
நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.
சகோதரி உஷா மங்கேஷ்கர் வரைந்த சிவாஜி ஐயாவின் உருவப்படம் அங்கு மாட்டப்பட்டிருந்தது.
நமது ‘கலைகுரிசில்’ டாக்டர் சிவாஜி கணேசன் ஐயாவிற்கு செல்வி. லதா மங்கேஷ்கர் அம்மா அவர்கள் தனது தந்தையின் நினைவாக வழங்கிய “தீனானத்’ மங்கேஷ்கர் விருதினை 1993 ஆம் ஆண்டு வழங்கியிருந்தார்.
மராட்டிய இசை நாடகத்தின் பொற்காலத்தை பற்றி பேசும், ஒவ்வொரு மராட்டிய குடும்பத்திலும் உச்சரிக்கப்படுகின்ற பெயரான ‘தீனானத்’ குழுவின் பெயரால் சிவாஜி ஐயாவுக்கு முதன்முதல் இவ்விருது வழங்கப்பட்டது. இப்போது அண்ணா சிவாஜியுடன் தங்கை லதாவும் சங்கமித்து விட்டார்.
வீணை மைந்தன்













