மிரட்டலான போலீஸ்… சிறப்பான குடும்பத்தலைவன்… 6 வருடங்களை கடந்த சேதுபதி
Share
நடிகர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் பீட்சா படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து நடித்த படம் சேதுபதி. இந்தப் படம் கடந்த 2016ல் வெளியாகி விஜய் சேதுபதிக்கு பொருளாதார அந்தஸ்தை கொடுத்தது. தற்போது இந்தப் படம் வெளியாகி 6 ஆண்டுகளை கடந்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், மாஸ்டர் ராகவன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2016ல் வெளியான படம் சேதுபதி. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அந்த கேரக்டருக்கான கம்பீரம், பாடி லாங்குவேஜை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். அருண்குமார் எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார் நிவாஸ் கே பிரசன்னா. படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தன.
தன்னுடைய சக காவலரின் கொலையில் துப்பறியும் அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். தொடர்ந்து அவருக்கும் வில்லனுக்கும் இடையில் ஏற்படும் ட்விஸ்ட்களை கதைக்களமாக அமைத்திருந்தார் இயக்குநர். படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் இடையிலான கெமிஸ்ட்ரி பேசப்பட்டது. இயல்பான குடும்பத்தலைவன் தனது மனைவி மீது செலுத்தும் அன்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் விஜய் சேதுபதி.
அதற்கு ஈடுகொடுத்து நடித்திருந்தார் ரம்யா நம்பீசன். படத்தில் அவர்களது குழந்தைகளாக நடித்திருந்தவர்களும் சிறப்பாக செய்திருந்தனர். சிறப்பான குடும்ப நிகழ்வு கலந்து இந்தப் படம் வெளியானது. தமிழில் போலீசாக முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு எந்தவிதமான பஞ்ச டயலாக்கும் இல்லாமல் இயல்பாக இந்தப் படம் வெளியானது. அதுவே சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் வகையில் இருந்தது.













