LOADING

Type to search

இலங்கை அரசியல்

மனோ சாட்சி – மனம் திறக்கிறார் மனோ கணேசன் – கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்

Share

கொஞ்சம் கிளர்ச்சி நிகழ்வுகள்! நிறைய உறங்கா உண்மைகள்

பகுதி 1

நடராஜா ரவிராஜ் என்ற எனது நண்பன்

காலம்:  2005ம் வருடம் வடக்கில் நடைபெற்ற வாக்கு பகிஸ்கரிப்பின் காரணமாக தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக மஹிந்த, பாதுகாப்பு செயலாளராக கோதாபய ஆகியோர் ஆட்சி செய்த காலகட்டம்.

நண்பன் ரவி உயிருடன் இல்லையே என திடீரென நான் நினைத்துக்கொள்வேன். அந்த 2006 நவம்பர், என் நினைவில் நிற்கிறது. 

காலை தொலைபேசியில் அவரது பணிப்பெண் அழுது குழறிய, சில நிமிடங்களில், அடித்து பிடித்துகொண்டு, போக்குவரத்து விதிகளையும் மீறிக்கொண்டு, கொழும்பு பொது மருத்துமனைக்கு ஓடினேன். அங்கு அப்போது ஒருவருமில்லை.

என்னைக்கண்ட மருத்துவமனை பிரதம அத்தியட்சகர், அழைத்து ஒரு அறையை கைகாட்டி விட்டார். அங்கே ஒரு பலகை பெஞ்சின் மீது என் நண்பன் ரவி படுத்திருக்க, “என்ன, இங்கே? ஐசியூவில்இல்லையா?” என்று நாக்குழற கேட்ட போது, “இல்லை, ஹொனரபல் கணேசன், ஹொனரபல் ரவிராஜ் இறந்துவிட்டார்” என்று அத்தியட்சகர் அமைதி ஆங்கிலத்தில் சொன்னார்.

மின்னல் தாக்கியது போலிருந்தது. அருகில் சென்று தொட்டு பார்த்தப்போ உடல் சூடு அப்படியே. முகத்தில் ரவியின் வழமையான அந்த மர்ம புன்னகை. 

நான் குனிந்து காயத்தை தேடினேன். எதுவும் தெரியவில்லை. இரத்தமும் இருக்கவில்லை. இரத்தத்தை துடைத்துவிட்டார்களோ.

 நான் கேட்காமலே, என்ன பார்க்கிறேன் என்பதை உணர்ந்து, அத்தியட்சகர், ரவியின் தலையில் இடப்புறத்தில் ஒரு புள்ளியை காட்டினார். துப்பாக்கி சன்னம் இதில்தான் நுழைய, பெரும் சிதைவில்லை.

வெறுமை உணர்வுடன் நான் வெளியில் வந்தபோது, அப்போதுதான் அலறலுடன் ரவியின் தாய், மனைவி, மகள், தொடர்ந்து செய்தியாளர், அரசியலர் வரத்தொடங்கினர். 

சட்டென ஒரு உண்மை உறைத்தது. ஒரு அரசியலர், மக்களுக்காக வாழ்ந்து, குரல் எழுப்பி, போராடி, உயிர் இழக்க வாழ்நாளில் அம்மாமனிதரை முழுமையாக உணர்ராதோர் உட்பட அனைவரும் அந்த இழப்பை உணருகிறார்கள். அதுவும் மரணம் கொடுமையாக நிகழும் போது, உணரலும் உயர்கிறது. 

ரவி வாழ்வும் இப்படிதான். அவரின் மறைவுக்கு பிறகு அஞ்சலி கூட்டங்கள் நடத்தி, பட்டங்கள் வழங்கி, இனம் வருந்தி வணங்குகிறது. யாரையும் குறை சொல்வதற்கில்லை. இதுதான் உலக இயல்பு.

ஆனால், அந்த இறப்பு நேரடியாக அவரது குடும்பத்துக்குத்தான். அன்று அங்கே கொழும்பு பொது மருத்துமனை வாசலில், ரவியின் தாயும், மனைவியும், மகளும் கதறியழுத காட்சி மனதை வெறுமையாக்கியது.

அந்த தாய் என் கையை பிடித்துகொண்டு கதறிய படம் ஊடகங்களில் வெளியாகி மக்களின் மனங்களை உருக்கியது. எனது ஞாபகத்தின்படி, ரவியின் மகள் பாடசாலை சீருடையில் அழைத்து வரப்பட்டார் என எண்ணுகிறேன். திருமதி. சசிகலா ரவிராஜ் அன்று அரசியல்வாதி இல்லை. ஒரு பாடசாலை ஆசிரியராக இருந்தார். அன்றைய தினம் அவர் அதிர்ச்சியில் உறைந்திருந்தார். 

பின்னாளில், 2020ம் ஆண்டளவில் சசிகலா தேர்தலில் போட்டியிட்டார். ஒருநாள் என்னை அழைத்து, ரவியின் நினைவாக ஒரு எழுத்தாக்கம் எழுதி அனுப்புங்கோ என்றார். குடும்ப நண்பர் சிலரும் கேட்டார்கள். இந்த விஷங்களைதான் எழுதி அனுப்பினேன். அதன்பின் ரவியின் நண்பர்கள் இடைக்கிடை என்னுடன் பேசுகிறார்கள்.  

  மீண்டும் விட்ட இடத்துக்கு வருகிறேன். 

ஒரு பெரும் இறுதி ஊர்வலத்தையும், அஞ்சலி கூட்டம் ஒன்றை விஹாரமகாதேவி பூங்காவிலும் நான், ராஜித உள்ளிட்டோர் ரூபசிங்கவின் போர் எதிர்ப்பு முன்னணி என நடத்தினோம். அதற்கும் அரசு தடைகளை போட்டது. இப்போ சிக்கலில் இருக்கும் பூஜித ஜயசுந்தரதான் கொழும்பு டிஐஜி. சண்டை போட்டு, நடத்தினோம். தமிழர்களை விட, சிங்களவர்கள்தான் அதிகம் வந்தார்கள். 

நான் யாழ்ப்பாணத்திலும், ரவி கொழும்பிலும் பிறக்கலை. சுகமான இன்றைய அரசியல் நாட்களை போன்றல்லாத, மரணம் அழைக்கிறது என்று தெரிந்திருந்த நெருக்கடி நாட்களில், நாம் தேர்தலுலுக்கு அப்பால், மனித உரிமை பாதையில் சென்றோம்.  

யுத்தம் முடிந்து சில நவம்பர்களில் நான் ரவியின் நினைவு கூட்டங்கள் நடத்தினேன். பின்னாளில் அக்கூட்டங்கள் சம்பிரதாய அரசியல் கூட்டங்களாக மாறின.

இறந்துபோன அரசியல்வாதியின் நினைவு கூட்டங்கள் இப்படித்தான் நடக்கும். இதில் பெரும் தவறில்லை. ஆனால் எனக்கு ரவியை பற்றி பேசுகிற போது, பிணவறையில் படுத்திருந்த ரவி, அந்த உடல் சூடு, மர்ம புன்னகை முகம், தோட்டா துளைத்த தலையின் சிறு புள்ளி, இவை ஞாபகத்திற்கு வரும். இந்த கூட்டங்களில், எனக்கு இயல்புநிலை இல்லாமலானது. 

அக்காலத்தில் இத்தகைய கொலை முயற்சிகள் எம்மீது பிரயோகிக்கப்பட இருந்தமை எமக்கு தெரியும். தெரிந்துகொண்டுதான் நாம் போராடினோம். 

ஒருமுறை நானும், ரவியும் களுத்துறையில் ராஜித ஏற்பாட்டில் போர் எதிர்ப்பு கூட்டமொன்றிற்காக கொழும்பிலிருந்து சென்றோம். ரவி அப்போ ஒரு புது ஜீப் வாங்கியிருந்தார். புறப்பட்டபோது அவர் கேட்டதால், அவரது புது மெருகு வண்டியில் ஏறிக்கொண்டேன். 

பின்னால் வந்த என் வண்டியில் பாதுகாப்பு அதிகாரிகள் ஏறிக்கொண்டார்கள்.

நானும், ரவியும் தனியாக, ரவி ஓட்டினார். களுத்துறை நகரமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்நிகழ்வில் கலந்துகொள்ள, விக்கிரமபாகு, மக்கள் கண்காணிப்பு குழுவின் செயலாளர் பிரியாணி குணரட்ன, எமக்கு முன் சென்றிருந்தார்கள்.

களுத்துறையை நெருங்கிய போது, பிரியாணி தொலைபேசியில்  அழைத்தார். கூட்ட மண்டப மேடை திரை சீலைக்கு பின் மறைந்திருந்த ஒரு சந்தேக நபரை ராஜிதவின் பாதுகாப்பு அலுவலர்கள் பிடித்துள்ளதாக சொன்னார்.

அதற்குள் எங்களுக்கு பின்னால் வந்த எனது வண்டி வேகமாக எங்களை கடந்து வந்து மறித்தது. அதிலிருந்து எனது பாதுகாப்பு அதிகாரி ஓடி வந்தார்.  

“சார், களுத்துறை மண்டபத்திலே சந்தேக நபர் ஒருவரை பிடித்திருக்கிறார்கள்” என்றார்.  “ஆம். எனக்கு தெரியும்”, என்றேன். “சார், நாங்கள் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்தால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நான் உடன்படவிலை. 

உடனே எனது அதிகாரி, என் வாகனத்தில் இருந்த இரு அதிகாரிகளை, ரவியின் வாகனத்தில் ஏற்றிவிட்டு “சார், நீங்கள் மெதுவாக வாங்கோ. நாம் சென்று அந்த மண்டபத்தை சோதிக்கிறோம்”, என்று கூறிவிட்டு முன்னாள் இருந்த என் வாகனத்தில் சென்றார்கள். 

நானும், ரவியும், இரு அதிகாரிகளுடன் மெதுவாக சென்றோம். சிறிதில் பிரியாணியிடம் இருந்து மீண்டும் அழைப்பு. பிடிபட்ட சந்தேக நபரிடம் ஒரு துப்பாக்கி கைப்பற்றப்பட்டு, அவரை களுத்துறை போலீஸ் கொண்டு போனதாக கூறினார். 

கூட்டத்திற்கு வந்த மக்களில் பாதிப்பேர் பதட்டத்தில் சென்றுவிட, ஒரு சிலரே இருப்பதாக, ஆனால் கூட்டத்தை கட்டாயம் நடத்த வேண்டும் என ராஜிதவும், விக்கிரமபாகுவும் சொல்வதாக பிரியாணி சொன்னார். நடத்துவோம், நாங்களும் வருகின்றோம் என நான் சொன்னேன்.

கூட்டம் நடந்தது. நாம் பேசினோம். கூட்டத்தின் பின் நாம் களுத்துறை போலீஸிற்கு செல்லவேண்டி  ராஜிதவின் அதிகாரிகள் போலீசுக்கு அறிவித்தார்கள். 

மேலிட உத்தரவு காரணமாக அந்த சந்தேக நபரை தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளதாக களுத்துறை போலீஸ் கூறியது. 

அந்நபர் பற்றி அதன் பின் தகவலில்லை. பதிவுகளும் இல்லை. அங்கே எம்மில் எவரையோ  கொல்ல நடந்த முயற்சி என ஊகித்தோம்.
அன்று நானும், ரவியும் பயணித்த அந்த புதிய வாகனத்தில்தான் நாரஹேன்பிட்ட எல்விட்டிகல மாவத்தை, அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் சில தினங்களுக்கு பின் ரவி சுட்டு கொல்லப்பட்டார். 

சுட்டு கொல்லப்பட்ட போதும்கூட அவரது வாகனத்தை அவர் தான் ஒட்டினார். அவரருகில் அமர்ந்திருந்த அவரது சிங்கள பொலிஸ் அதிகாரியும் கொல்லப்பட்டார்.  

இதிலிருந்து தெரிவது, பொதுவாக சொல்லப்படுவதை போல, அரசு பயங்கரவாதம் ஒட்டுமொத்த பாதுகாப்பு துறையையும் தழுவியதல்ல. கொலை, கடத்தல், சித்திரவதை குழுக்களை அரசியல் தலைமை தம் தேவைகளுக்காக அமைத்து பயன்படுத்தியது. 

இதை நாம் கொழும்பில் இருந்த சர்வதேச சமூகத்துக்கு சொன்னோம். அப்படியா, என செவிமடுத்தார்கள். அவ்வளவுதான். 

அவ்வளவுதான்.

இத்தகைய தந்திர அரசபயங்கரவாத சூழல் பற்றி போராட்டங்கள் நடத்திய நான், ரவி, விக்கிரமபாகு, சிறிதுங்க, பிரியாணி ஆகியோர் அறிந்திருந்தோம். எச்சரிக்கையாகவும் இருக்க தீர்மானித்தோம். 

ஆனால் ரவிக்கு எச்சரிக்கையில் சிரத்தையில்லை. கொழும்பு ஹவ்லக் வீதியில் பயணிப்போருக்கு ஹவலக்-பார்க் வீதி சந்தியை ஒட்டிய சிறுவர் பூங்காவும், BRC விளையாட்டு கழக திடலும் தெரியும். ஹவ்லக் வீதியை ஒட்டி இன்னொரு சிறிய சாமாந்திர வீதியும் இருக்கும். அதில் பாரம்பரியமாக ஒரு சிங்கள வியாபாரி செவ்விளநீர் விற்பார்.

ஒரு நாள் நான் ஹவ்லொக் வீதியிலே சென்றபோது, அந்த இளநீர் கடைக்கு பக்கத்தில் வாகனத்தை தரித்து, ரவியும், அவரது காவலர்களும் இளநீர் அருந்தியபடி சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கண்டேன்.

உடனடியாக எனது வாகனம், யூ-டர்னில் வந்து ரவியின் வாகனத்தின் பின் நின்றது. எம்மை கண்ட இளநீர்காரர் தனக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்கிறார்கள் என சந்தோசப்பட்டு பார்த்தார். நான் ரவியை கடுமையாக கண்டித்தேன். 

தங்கள் வீஐபீயை பகிரங்க தெருவோரத்தில் வைத்து இளநீர் குடித்துக்கொண்டிருந்த ரவியின் காவலர்களை கடுமையாக திட்டினேன். “உங்களுக்கு மூளை இல்லையா?” என நான் சிங்களத்தில் கேட்டது ஞாபகம். 

தராதரத்தில் உயர்ந்த எனது பாதுகாப்பு அதிகாரியும் ரவியின் காவலர்களை சாடினார்.

ரவியையும், காவலர்களையும் வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு, நான் போனேன். 

இச்சம்பவமும், களுத்துறை சம்பவமும் நிகழ்ந்த சில நாட்களில் ரவியின் ஏற்பாட்டில் கூட்டமைப்பு எம்பிக்கள் கொழும்பு ஐநா வளாகத்திற்கு முன்னாலே ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதை அடுத்து ரவி கொல்லப்பட்டார்.

உலக சமுதாயத்தின் கொழும்பு முகவரியான ஐநா அலுவலக வாசலில், நாட்டில் ஒடுக்கப்படும் இனத்தின் ஜனநாயக பிரதிநிதிகள் ஜனநாயக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அடுத்த நாள் அதில் ஒரு எம்பி கொல்லப்படுகிறார். இதுபற்றி ஐநா ஒன்றும் ஆர்ப்பரிக்கவில்லை. 

இதன் பிறகு எனக்கு சர்வதேச சமூகம் பற்றிய நம்பிக்கை குறைய தொடங்கியது.