LOADING

Type to search

மலேசிய அரசியல்

இந்து சங்க ஆண்டுக் கூட்டத்தை தடுக்கமுயன்ற மோகன் ஷான் நீதிமன்றத்தில் மண்டியிட்டார்…… 8000 வெள்ளி தண்டம் விதிப்பு

Share

‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசனுக்கு சோதனை மேல் சோதனை இந்து சங்க ஆண்டுக் கூட்டத்தை தடுக்கமுயன்ற மோகன் ஷான் நீதிமன்றத்தில் மண்டியிட்டார் – வெ. எட்டாயிரம் தண்டம் விதிப்பு

-நக்கீரன்

கோலாலம்பூர், மே24:

மலேசிய இந்து சங்கத்தின் 46-ஆவது ஆண்டுக் கூட்டம் அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மே 28-ஆம் நாள் நடைபெற இருக்கிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் தலைவர் டத்தோ மோகன் ஷான் வழக்கு தொடர்ந்தார். இப்பொழுது அந்த வழக்கை திரும்பப் பெற முயன்ற அவர், நீதிமன்றத்தின் கண்டிப்புக்கும் தண்டனைக்கும் ஆளானார்; தங்க கணேசன் தலைமையிலான நிருவாகத்திற்கு செலவுத் தொகையாக எட்டாயிர வெள்ளி அளிக்க வேண்டும் என்றும் மோகன் ஷானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஓர் ஆண்டாக தங்க கணேசன் படாதபாடு பட்டுவருகிறார். நீதிமன்றத்திற்கு அலைவதுடன் பலவித சிக்கலையும் எதிர்கொண்டதால், ஏறக்குறைய ஆறு மாத காலம்கூட அவரால் தேசியத் தலைவர் பொறுப்பை நிறைவேற்ற முடியவில்லை. இந்து சங்கத்திற்கும் மலேசிய இந்து சமுதாயத்திற்கும் ஏதாவது ஆக்கப்பூரவ பணியை ஆற்றலாம் என்று முனைப்பு காட்டும் அவரைத் தடுத்து நிறுத்தும் விதமாக தொடர்ந்து வழக்குக்கு மேல் வழக்கைப் போட்டு, அவரை சோதனைக்கு உள்ளாக்கி வருகிறார், மோகன் ஷான்.

கடந்த ஆண்டு இந்து சங்கத் தலைவர் தேர்தலின்போது, இந்து சங்க உறுப்பினர்களாலும் மத்தியப் பேரவை அங்கத்தினர்களாலும் புறக்கணிக்கப்-பட்ட மோகன் ஷான், தன் தோல்வியை ஒப்புக்கொண்டு கூட்டம் நடைபெற்ற அரங்கத்தில் இருந்து தன் பரிவாரங்கள் நால்வருடன் வெளியேறினார்.

அடுத்த இரண்டு நாட்களில் தான்தான் இன்னமும் தலைவர் என்று சொல்லிக் கொண்டு நீதிமன்றத்திற்கு சென்ற அவரை, நீதிமன்றம் ஏற்கவில்லை. ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று அறிவித்தது நீதிமன்றம்.

அத்துடன் மோகன் ஷான் ஒதுங்கினாரா, ஓய்ந்தாரா என்றால் அதுவும் இல்லை;

மலேசிய இந்து சங்கம் தனக்கு கடன் பட்டுள்ளது என்றும் சேரவேண்டிய ‘அலவன்ஸ்’ தொகையை வழங்க வேண்டும் என்றெல்லாம் கேட்டு வழக்குகளைத் தொடர்ந்து கொண்டே இருந்ததார்; இந்த நிலையில் அடுத்த ஆண்டுக் கூட்டமும் நெருங்கிவிட்டது; இதை எதிர்த்தும் மோகன் ஷான் நீதிமன்றத்திற்குச் சென்றார்.

இதற்கிடையில், கடந்த 6 மாத காலத்தில் மலேசிய இந்து சங்கம் பட்டிருந்த கடனில் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் மேல் அடைக்கப்பட்டுள்ளது; அதைப்போல சங்கத்தின் தேசியத் தலைமையக நிருவாக நடைமுறைக்காக போதிய நிதிக் கையிருப்பும் உள்ளது; குறிப்பாக, மலேசிய இந்து சங்கத்திற்கு சொந்தமான தாப்பா அருள்மிகு ஜெகநாதர் ஆலயத்தின் பொருளகக் கணக்கில், தங்க கணேசன் பொறுப்பேற்ற போது வெ.24 ஆயிரம்தான் இருந்தது; இதை 74ஆயிர வெள்ளிக்கு மேல் தங்க கணேசன் உயர்த்தி இருக்கிறார் என்று தேசியப் பேரவை உறுப்பினர்கள் சார்பில் தெரிவிக்கப் பட்டது.

கடந்த ஆண்டு, மலேசிய இந்து சங்கத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த மோகன் ஷான், தனக்கு பெரும்பான்மை இல்லாததால் மத்தியப் பேரவையில் இருந்தும் வெளியேறினார். இப்பொழுது மீண்டும் இந்து சங்க மத்தியப் பேரவையில் நுழைவதற்காக போட்டி இடுகிறார். அத்துடன், தேசியத் தலைவராக மறுபடியும் வலம்வர விரும்பும் அவர், நாடு முழுவதும் ஆதரவைத் திரட்டி வருகிறார்.

இவ்வளவையும் செய்துக் கொண்டு, ஆண்டுக் கூட்டத்திற்கும் தடைவிதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய மோகன், அது குறித்த வழக்கு இன்று மே 24, புதன் கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது, வழக்கைத் திரும்ப பெற விரும்புவதாக நீதிபதி முன்பு அந்தர்பல்டி அடித்தார்.

இதனால், நீதிபதியின் கண்டிப்புக்கும் தண்டவிதிப்புக்கும் ஆளானார் மோகன் ஷான். மலேசிய இந்து சமுதாயமும் இந்து சங்க உறுப்பினர்களும் எல்லாவற்றையும் கவனித்து வருகின்றனர்.

மலேசிய இந்து சங்கத்திற்கு சொந்தமான மானியத்தில் முறைகேடு நடந்திருப்பது குறித்து 3 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தின்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்; அதற்கு பதில் அளித்த மோகன், பத்து பேர் இருக்கும் இடத்தில் தவறு நடக்கத்தான் செய்யும். அரசாங்க அதிகாரிகள் ஊழல் செய்யவில்லையா என்று செய்தியாளர்களிடம் எதிர்க்கேள்வி கேட்டதெல்லாம் நாளேடுகளில் செய்தியாக வந்தன.

ஊழல்வாதிகளையும் திருடர்களையும் துணைக்கு அழைக்கும் மோகன் ஷாண், 13 ஆண்டுகளில் செய்ய முடியாததையா, மீண்டும் வந்து செய்யப்போகிறார்? இவற்றையெல்லாம் அவதானித்து, இந்து சங்கத்தின் எதிர்காலத்தைக் கருதி, அதன் அங்கத்தினர்கள் நடுநிலையாகவும் நியாயமாகவும் முடிவெடுக்க வேண்டும்.