வடக்கு ஆப்கானிஸ்தானில் 80 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
Share
இச்சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக உள்ளூர் கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆக்கிரமித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அப்போது ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள், சுதந்திரம் மீதான ஒடுக்குமுறையைத் தொடங்கிய பின்னர் இதுபோன்ற சம்பவம் நடப்பது அந்நாட்டில் இதுவே முதல் முறை என கருதப்படுகிறது.
பல்கலைக்கழகம் உட்பட ஆறாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவிகள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 மற்றும் 4ஆம் தேதிகளில் சார்-இ-புல் மாகாணத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாரணையில், மாணவிகளுக்கு விஷம் கொடுத்த நபருக்கு தனிப்பட்ட விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது.
நஸ்வான்-இ-கபோத் ஆப் பள்ளியில் 60 மாணவிகளும், நஸ்வான்-இ-ஃபைசாபாத் பள்ளியில் 17 மாணவிகளும் விஷம் கொடுக்கப்பட்டதாக கல்வி அதிகாரி கூறியுள்ளார். ‘இரண்டு தொடக்கப் பள்ளிகளும் ஒன்றுக்கொன்று அருகாமையில் உள்ளன, அதனால் ஒன்றன் பின் ஒன்றாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் மாணவிகளை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றினோம், இப்போது அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்’ என அதிகாரி கூறினார்.
துறை சார்ந்த விசாரணை தற்போது தொடர்கிறது, ஆரம்பகட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத ஒருவர் இந்த தாக்குதலை நடத்த மூன்றாம் தரப்பினருக்கு பணம் கொடுத்ததாக தெரிகிறது எனவும் அதிகாரி கூறினார். மாணவிகளுக்கு எப்படி விஷம் கொடுக்கப்பட்டது, விஷத்தால் ஏற்பட்ட பாதிப்பின் தன்மை குறித்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. தற்போதைய தகவலின்படி, ரஹ்மானி என்ற அந்த அதிகாரி மாணவிகளின் வயதைக் குறிப்பிடவில்லை எனினும் அவர்கள் 1 முதல் 6ஆம் வகுப்பு வரை இருக்கலாம் எனவும் அவர் கூடுதலாக தெரிவித்தார்.
அண்டை நாடான ஈரானில் கடந்த நவம்பர் மாதம் சுமார் 650 பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமிகள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுவதாக அந்நாட்டின் ஒரு மூத்த அரசு அதிகாரி கூறியது பேசுபொருளானது. 2022ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று கோமில் உள்ள நூர் தொழில்நுட்பப் பள்ளியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 மாணவிகள் விஷத்தின் அறிகுறிகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுதான் விஷம் வைக்கப்பட்டதன் முதல் சம்பவம் எனவும் கூறப்பட்டது. அந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கோம் நகரிலுள்ள ஆளுநர் அலுவலகத்திற்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.













