LOADING

Type to search

இந்திய அரசியல்

‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை…?’ ஜெயலலிதா மீதான அண்ணாமலையின் விமர்சனத்திற்கு ஓபிஎஸ் பதிலடி

Share

ஜெயலலிதா பற்றிய அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும், அதிமுக ஆட்சி பற்றியும் தரக்குறைவாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

அவரது பேட்டி ஒன்றில், தமிழகத்தில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்தப் பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா எவ்வித அரசியல் பின்பலமின்றி, தன்னுடைய தனித் திறமையால், மதி நுட்பத்தால், சாணக்யத்தனத்தால், ராஜதந்திரத்தால், சோதனைகளை சாதனைகளாக்கி, தடைக் கற்களை படிக்கற்களாக்கி, தமிழக மக்களின் அன்பைப் பெற்று, தமிழக மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. சமூக நீதியைக் காத்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா.

தேசிய அளவில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் தோட்டத்துக்கு வந்து சென்றுள்ளனர்.

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், பாரதீய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காதிருந்தால், ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராகவே பொறுப்பேற்றிருப்பார்.

இப்படிப்பட்ட உலகம் போற்றும் உன்னதத் தலைவரை, மறைந்தாலும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒப்பற்ற தலைவரை, இந்தியத் திருநாடே வியந்து பார்த்த வீரம் மிக்க தலைவரை, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாம் ஜெயலலிதாவையும், அவருடைய ஆட்சியையும் தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

ஜெயலலிதாவின் 1991&-1996 ஆண்டு ஆட்சி முடிவடைந்தவுடன், ஜெயலலிதாவை அரசியலிலிருந்து ஓரம் கட்ட வேண்டும் என்ற தீயநோக்கத்தின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பொய் வழக்குகள் பல புனையப்பட்டன. அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு விண்ணுலகத்திற்கு சென்றபோது அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அவர் நிரபராதியாகத்தான் இந்த மண்ணை விட்டுச் சென்றார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்காலம். உண்மையை உணராமல், மனம் போன போக்கில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.