LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ்நாட்டிற்கு பாஜக செய்த நன்மைகளை பட்டியலிட முடியுமா? அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

Share

தமிழ்நாட்டிற்கு பாஜக செய்த நன்மைகளை பட்டியலிட முடியுமா என்று, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி விடுத்தார்.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன்12) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட முதல்வர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

எடப்பாடிக்கு பதில்

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக திறந்து வைக்கிறது என்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வருவது தொடர்பான கேள்விக்கு, “தொடர்ந்து இதற்கு நாங்கள் விளக்கம் அளித்து வருகிறோம். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை அவர் மருத்துவமனையாக மாற்றினார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார். இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிய வாய்ப்பு இல்லை” என்று பதில் அளித்தார்.

மோடி மீது அமித்ஷாவிற்கு கோபமா?

2 முறை தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பு பறிபோனதற்கு திமுக தான் காரணம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு தொடர்பான கேள்விக்கு,”வெளிப்படையாக இந்தக் கருத்தை அவர் கூறி இருந்தால் உரிய விளக்கம் அளிக்கப்படும். தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்ற கூறியது மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் மோடி மீது அமித் ஷாவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை. 2024ம் ஆண்டில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் உள்ளார்கள். ஒரு வேளை இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்” என்று பதில் அளித்தார்.

தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்த அமித் ஷாவின் பேச்சு தொடர்பான கேள்விக்கு, “தமிழகத்துக்கு என்று பிரத்யேகமாக என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு அமித் ஷா பதில் சொல்லவில்லை” என்றார்.

இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் வந்த திட்டங்கள்

“காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ரெயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, சேதுசமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரெயில்வே கோட்டம், சென்னை துறைமுகம், மதுரவாயல் பறக்கும் சாலை, நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், சென்னை அருகில் கடற்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய 3 இடங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப ஜவுளி பூங்கா இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வந்தன.

இதுபோல் பா.ஜனதா தமிழ்நாட்டுக்கு என்ன சிறப்புகள் கொண்டு வந்து இருக்கிறீர்கள் என்பது தான் என்னுடைய கேள்வி.

ஆகவே எந்த திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டு இருப்பதைப் பற்றியும் நான் கேட்கவில்லை.

இன்றைக்கு ஜி.எஸ்.டி.-யில் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசுக்கு நிதி கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அந்த ஜி.எஸ்.டி. நிதியில் தமிழ்நாட்டில் இருந்து தான் அதிகமாக கொடுத்து இருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டுக்கு தான் மத்திய அரசு போதிய நிதி கொடுப்பதில்லை. ரொம்ப குறைவாக கொடுத்துக் கொண்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் அதிகமாக கொடுக்கிறது. அதைத்தான் அடிப்படையாக வைத்து கேட்டேன்.

எய்ம்ஸ் மருத்துவமனை

அதுபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.1200 கோடி மதிப்பில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு நிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லி இதை பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார்.

அதன் பிறகு அமித் ஷா பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்து இருக்கிறார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி 50 சதவீதம் முடிந்து விட்டது என சொன்னார்கள் தவிர இதுவரைக்கும் எந்த பணியும் நடக்கவில்லை என்பது தான் எனது குற்றச்சாட்டு.

அதை எல்லாம் மூடி மறைத்து பேசிவிட்டு அமித் ஷா சென்றுள்ளாரே தவிர நாங்கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் தரவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை அன்றைக்கு தேவையேபடவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவ கட்டமைப்புகள் அதிக அளவில் சிறப்பாக இருந்தன. இருந்தாலும் எய்ம்ஸ் திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு. அவர்கள் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆகவே இது பற்றி கேள்விகள் கேட்பது பொறுப்புள்ள மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு அழகல்ல.”

இவ்வாறு அவர் கூறினார்.