LOADING

Type to search

இந்திய அரசியல்

வன்முறை நீடிப்பு: 1500 குழந்தைகளை மிசோரம் பள்ளிகளில் சேர்த்த மணிப்பூர் மக்கள்

Share

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக மணிப்பூரிலிருந்து பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து அண்டை மாநிலமான மிசோரத்திற்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்து வரும் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி தடையின்றி கிடைக்க மிசோரம் மாநிலம் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. இடம்பெயர்ந்த குடும்பங்களை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மிசோரம் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மிசோரம் கல்வி இயக்குநர் லால்சங்லியானா, “இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கப்பட்டதாகவும், மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, தேவையான ஆவணங்களை அவர்களால் சமர்ப்பிக்க முடியாவிட்டாலும், பள்ளிகளில் சேர அனுமதிக்கப்பட்டனர்,” என்றார். இதற்கிடையில், மணிப்பூரில் இருந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த 11,800-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மாநில அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசிடமிருந்து நிதியுதவி கிடைக்கும் என மிசோரம் மாநில உள்துறை ஆணையரும், செயலாளருமான ஹெச் லாலெங்மாவியா நம்பிக்கை தெரிவித்தார்.