தனுஷ் எழுதி, இயக்கி, நடிக்கும் டி50 படத்தின் அறிவிப்பு!
Share
தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் 7-வது இடத்தைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து தனுஷின் 50-வது படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது. அந்த நேரத்தில், ‘பா. பாண்டி’ படத்துக்குப் பிறகு தனுஷ் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அதில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாகவும், படத்திற்கு ‘ராயன்’ என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் பரவின. ஆனால், இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை விஷ்ணு விஷால் மறைமுகமாக கூறியிருந்தார். அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று மட்டும் தனது சமூகவலைத்தளத்தில் அவர் கூறியிருந்தாரே தவிர, எந்தப் படம் என்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், தனுஷ் மற்றும் சன் பிச்கர்ஸ் தரப்பிலிருந்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது பக்கத்தில் புதிய பதாகை ஒன்றுடன் படப்பிடிப்பு துவங்கியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50 ஆவது படமாக உருவாக உள்ள இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கி, நடிக்கவுள்ளார்.













