கலைஞர் கருணாநிதிக்கு கிழக்கு மாகாணத்தில் நூற்றாண்டு விழா நடத்த எதிர்ப்பு
Share
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நூற்றாண்டுவிழா நடத்த கிழக்கு மாகாணம் பொருத்தமில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது இந்திய விஜயத்தின் போது அவருக்கு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அரச சார்பில் விழா எடுக்கப்படும் என்று தமிழக ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் உரையாடும் போதே அரியநேத்திரன் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அத்தகைய விழாவை நடத்துவது பொருத்தமற்றது என்ற கருத்தை வெளியிட்டார்.
”தமிழ்நாட்டு முதல்வர் அமரர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டுவிழா தமிழ்நாடு முழுவதும் பல வகைகளில் தற்போது இடம்பெற்று வருகின்றன. அவர் பிறந்த நாட்டில் அவர் ஆட்சிசெய்த தமிழ்நாட்டில் கட்டாயம் அந்த மக்கள் அதை செய்வது நல்லது.
அவர் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்து முறையும் வெற்றி பெற்றவர். தமிழ்நாடு முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் என்று உயர் பொறுப்புகளை வகித்தவர். தமிழகத்தின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் கருணாநிதியின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் அவரின் நூற்றாண்டு விழாவை மாநிலம் முழுவதும் ஜுன் 2023 திங்கள் முதல் ஜுன் 2024 திங்கள் வரை தமிழக அரசால் கொண்டாட முடிவு செய்யப்பட்டது நல்ல விடயம்” என்று கருணாநிதிக்கு புகழ் மாலை சூட்டினார் அரியநேத்திரன்.

எனினும், இலங்கையில் கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் விரைவில் கிழக்கு மாகாணத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடத்தப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊடகங்களில் (05/07/2023) கருத்து வெளியிட்டிருந்தார்.
”உண்மையில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கிழக்கு மாகாணத்தில் நடத்துவது பொருத்தமான ஒன்றாக தற்போது இல்லை. வடக்கு கிழக்கு மக்கள் கடந்த பல சகாப்தங்களாக இனப்படுகொலைகளை சந்தித்தபோதெல்லாம் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுத்தாலும் ஆக்கபூர்வமாக அவர் எதையும் செய்யவில்லை என்ற ஒரு கருத்து வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் மத்தியில் உண்டு.
2006 ஆம் ஆண்டு திருகோணமலை மாவிலையாற்றில் ஆரம்பித்த போர் 2009, மே,18 அன்று முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போது வடக்கு கிழக்கு தமிழர்கள் பல இலட்சம் மக்கள் மாண்டபோதும் முதலமைச்சர் கருணாநிதியால் போரை நிறுத்தவோ, தமிழ்மக்களை காப்பாற்றவோ இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் செய்யவில்லை என்ற ஒரு மனவேதனை தமிழ்மக்கள் மத்தியில் உண்டு” என்று கூறினார் அரியநேத்திரன்.
இவ்வாறான நிலையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றாலும் மக்கள் அதனை விரும்பி கலந்துகொள்ளும் நிலை ஏற்படாது என்பதே தனது தனிப்பட்ட கருத்தாகும் என்கிறார் தமிழரசு கட்சியின் ஊடகச் செயலர்.
”கலைஞர் கருணாநிதி அவர் போற்றுதற்குரியவர் பாராட்டுதற்க்குரியவர் என்பதெல்லாம் உண்மை ஆனால் அவர் தொடர்பாக விழா எடுக்ககூடிய இடமாக கிழக்கு மாகாணம் பொருத்தமானது இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து எனக் குறிப்பிட்டள்ளார்”.
இதேவேளை கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை இலங்கை அரச விழாவாக எவ்வாறு கொண்டாட முடியும் என்ற கேள்விகள் தமிழர் தாயகப் பகுதியின் பல இடங்களிலிருந்து எழுந்துள்ளன.













