பழங்குடி இளைஞர் மீது பாஜககாரர் சிறுநீர் கழித்து அவமதிப்பு: மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ‘பாவமன்னிப்பு’ கோரினார்
Share
மத்திய பிரதேசத்தில் பாஜககாரரால் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை அழைத்து காலை கழுவினார், முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்.
மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளியான தேஷ்பத் ரவத் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். புகைபிடித்தவாறு அந்த தொழிலாளி மீது தேஷ்பத் ரவத் சிறுநீர் கழிக்கும் கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
3 மாதங்களுக்கு முன் நடந்த இந்த விவகாரம் சமூக வலைத்தளங்கள் மூலம் அம்பலமான நிலையில் இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார், பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர். மேலும், அவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதும் அவருக்கு பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா மற்றும் பிற பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதனிடையே, பர்வேஷ் சுக்லா தலைமறைவான நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என மத்தியபிரதேச முதல்-மந்திரி அறிவித்தார்.
பர்வேஷ் சுக்லா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்தனர்.
இந்தநிலையில், அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை போபாலில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து பேசிய முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அவரது காலை கழுவி பரிகாரம் தேடினார்.பின்னர் அவருக்கு மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாவ மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து பழங்குடி இளைஞரிடம் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:-&
அந்த வீடியோவைப் பார்த்து நான் வேதனைப்பட்டேன். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் எனக்கு கடவுள் போன்றவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே, குற்றவாளி பர்வேஷ் சுக்லா தான் அவமதித்த இளைஞரின் தந்தையை மிரட்டி, சமூக வலைத்தளங்களில் பரவும் ‘சிறுநீர் அவமதிப்பு வீடியோ போலியானது’ என்று எழுதி வாங்கிய தகவலும் இப்போது அம்பலமாகியுள்ளது.













