LOADING

Type to search

இந்திய அரசியல்

“மோடியின் மதவெறி ஆட்சியை எதிர்கொண்டு ஒழிக்கும் ஆற்றல் கொண்ட ஒரே தலைவர், மு.க. ஸ்டாலின் மட்டும்தான்”

Share

நெல்லையில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் ஆ. ராசா எம்பி பேச்சு

நெல்லை பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நெல்லை முன்னாள் எம்எல்ஏ ஏஎல்எஸ் லட்சுமணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களாக அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா கூறியதாவது:-

” ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும் ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார். பல்வேறு தலைவர்களின் வரலாற்றைப் படித்துள்ள பன்முகத்தன்மை கொண்ட கலைஞரைப் போல் உலகில் வேறு எந்த தலைவரையும் பார்த்ததில்லை.

அண்ணாவால் கூட அகில இந்திய அரசியலில் கால் பதிக்க முடியவில்லை. முந்தைய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திமுகவை புழுவைப் போல் பார்க்கும் எண்ணம் கொண்டிருந்தனர்.

இலவச மின்சாரம் வழங்கியது, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்கு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மட்டும் தான் சொந்த காரர்.

பெரியார், அண்ணா காலத்திலிருந்து இன்றுவரை திராவிடம் என்றால் இந்திக்காரர்களுக்கு பிடிக்காது. பாஜகவினரிடம் கொள்கை இல்லை. அவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். கொள்கை சித்தாந்தம் கொண்ட ஒரே இயக்கம் திமுக என்பதால் பாஜகவினர் நம்மை கண்டு பயப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களையும் உயர் நீதிமன்ற நீதிபதியாக்கிய பெருமை முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்குத் தான் உண்டு.

மெரினாவில் கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் வைக்க வேண்டிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கூட நாங்கள் ஜெயித்து விட்டோம். பேனா வைக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். தற்போது அவர் பெருநிலக்கிழார். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த இடத்தை விட 500 ஏக்கர் நிலம் தற்போது கூடுதலாக கொள்ளையடிக்கப்பட்டு வைத்திருக்கிறார். அவர் விவசாய நிலத்திற்கு மின்சாரம் வழங்க உத்தரவிட்டதே கலைஞரின் பேனா தான். கலைஞரின் திட்டத்தில் பயன் பெறாமல் தமிழகத்தில் யாரும் வாழ்ந்து விட்டால் நான் தூக்கு போட்டுக் கொள்கிறேன். கலைஞரின் திட்டமில்லாமல் யாரும் தமிழகத்தில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்க்கவில்லை என்றால் அண்ணாமலை ஆடு மேய்த்திருப்பார். எடப்பாடி பழனிச்சாமி வெல்லமண்டி வைத்திருப்பார். வானதி சீனிவாசன் கூடை மேய்ந்திருப்பார்.

அம்பேத்காரால் கூட பெண்களுக்கு சமூக உரிமை கொடுக்கும் சட்டத்தை கொண்டுவர முடியவில்லை. கலைஞர் அந்த சட்டத்தை 1989இல் இந்தியாவிற்கு வழிகாட்டும் விதமாக தமிழகத்தில் கொண்டு வந்தார். உலகத் தமிழர்கள் யாரும் பெற்றிடாத இடத்தை கலைஞர் பெற்றுள்ளார்.

பிரதமர் மோடி ஆட்சியை அகற்றியே தீருவேன் என சொல்லிக் கொண்டிருக்கும் நாட்டின் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான். அவருக்கு மட்டுமே அந்த ஆற்றல் உண்டு..

உலகத்திலேயே மிகப்பெரிய ஊழலை 18 லட்சம் கோடிக்கு அதானி செய்துள்ளார் அதனை ஹிண்டன் பார்க் அறிக்கை சொல்கிறது. அந்த அறிக்கையை யாராலும் மறுக்கக்கூட முடியவில்லை. தேசத்தின் சொத்தை அதானி அபகரித்துள்ளார். பேசா மடந்தையாக இருக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி. இதுவரை அவரை போன்ற ஒரு அரசியல் தலைவரை கண்டதில்லை . அரசு விமானத்தில் அதானியை அழைத்துச் சென்று வெளிநாடுகளில் ஒப்பந்தத்தை வாங்கி கொடுத்தவர் பிரதமர் மோடி. ஏமாற்று பேர்வழியாக அதானி திகழ்கிறார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் பிரதமரும் அமைதி காத்து வந்தால் அவரும் ஏமாற்று ப்பேர்வழிதான்.

நான் சொல்வதில் தவறு இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும். மோடிக்கு தைரியமும் துணிச்சலும் மனவலிமையும் இருந்தால் அதானி விவகாரம் தொடர்பாக வாய் திறந்து பேசட்டும். இந்திய படை வீரர்கள் 48 பேர் காஷ்மீரில் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்த விவகாரத்தின்போது மோடிக்கு தேச பக்தி வந்து விட்டது. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ராணுவ வீரர்களை கொன்று விடுகிறார்கள். உலகத்தின் தலைவர் விஸ்வகுரு என சொல்லப்படும் மோடி மீது கவர்னராக இருந்த சத்திய பால் மாலிக் புல்வாமா தாக்குதல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். உயர் அதிகாரிகள் அனைவரும் எனது வாயை அடைத்து விட்டார்கள் என அவர் தெரிவித்தார். தேர்தலுக்காக ராணுவ வீரர்களை கொன்றுவிட்டு 2019ல் ஆட்சிக்கு பாஜக வந்தது. பாஜக ஊழல் மட்டுமல்ல; மதவாதத்தையும் செய்கிறது. சுதந்திர போராட்டத்திற்கு போராடிய இஸ்லாமியர்களின் பெயர்களை மத்திய பாஜக அரசு மறைக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆளுநர் சொல்கிறார். மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை அவர் பார்க்க வேண்டும். பாஜக அரசில் மோடியின் அருகே இருக்கும் மத்திய அமைச்சரின் வீடு மணிப்பூரில் சூறையாடப்படுகிறது. இப்படி எல்லாம் நடக்கும் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு கெடவில்லையம். தமிழகத்தில் கெட்டுவிட்டதாம். ஆளுநர் தொடர்ந்து சொல்லி வருகிறார் பாராளுமன்றத்தில் அதானி குறித்தும் பிபிசி குறித்தும் பேசுவதற்கு மம்தா கட்சியினர் கூட தயாராக இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் அது குறித்து பேசுவதற்கு தைரியம் கொடுத்த ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். மதவாதமும் ஊழலும் கைகோர்த்துவரும் மோடியின் ஆட்சியை எதிர்கொண்டு ஒழிப்பதற்கு மகத்தான ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்.”

இவ்வாறு அவர் பேசினார்.