LOADING

Type to search

இந்திய அரசியல்

தென்காசி தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையிலும் பழனிநாடார் (காங்) வெற்றி

Share

தென்காசி தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையிலும் பழனிநாடார் (காங்) வெற்றி பெற்றார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது தென்காசி தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

(பழனிநாடார் 89315; செல்வமோகன்தாஸ் 88945).

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. எனவே தபால் வாக்குகளையும், மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்றுகள் வரை பதிவான வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும் என ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதி, தபால் ஓட்டுகளை மறுபடியும் எண்ண உத்தரவிட்டார்.

அதன்படி தென்காசி மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று (ஜூலை 13) தபால் ஓட்டு மறு எண்ணிக்கை பணிகள் நடந்தன.

இதற்காக ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல அறையில் இருந்து 4 பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தபால் ஓட்டுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அப்போது ஏற்கனவே பதிவு செய்திருந்த வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்றனர். இதனை கண்காணிப்பாளர் கண்காணித்து வந்தார். ஓட்டு எண்ணிக்கையையொட்டி பழனிநாடார் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் பிற வேட்பாளர்களும் வந்திருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செல்வமோகன் தாஸ் பாண்டியன், கோர்ட்டு உத்தரவுப்படி 13 ஏ, 13பி, 13சி ஆகிய மூன்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறினார். இதனால் வாக்கு எண்ணிக்கை

நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக செல்வமோகன் தாஸ் பாண்டியன் கூறும் போது, ஐகோர்ட்டில் நாங்கள் தொடர்ந்த வழக்கில் தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ண வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. மறு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டுகள் அனுப்பப்பட்ட 13 ஏ கவர்கள், 13 பி -வாக்காளர்களின் முழு விவரம், 13 சி -யாருக்கு வாக்களித்தார்கள் என்பதற்கான ஓட்டுச் சீட்டு ஆகிய 3 பேப்பர்களையும் கணக்கில் எடுத்து கொண்டு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 13 ‘சி’ சீட்டு மட்டுமே எண்ணப்படுகிறது. தற்போது நான் தெரிவித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

சில மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மாலையில் முடிவடைந்த இந்த மறு வாக்கு எண்ணிக்கையிலும் பழனிநாடாரே வெற்றி பெற்றார். மறுஎண்ணிக்கை தபால் வாக்கு விவரம் வருமாறு:

பழனிநாடார் 1606 (2021ல் 1609)

செல்வமோகன்தாஸ் 674 (2021ல் 673)

கடந்த முறையை விட பழனி நாடார் 3 வாக்குகளும், செல்வமோகன்தாஸ் ஒரு வாக்கும் குறைவாகப்பெற்றுள்ளனர்.

2021ல் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பழனிநாடார் தற்போது 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.