LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ்நாடு என்ற பெயர் சூட்டக் கோரி உயிர் நீத்த சங்கரலிங்கனார் கவர்னர் பதவியையும் ஒழிக்க குரல் கொடுத்தார்

Share

விருதுநகர் அருகேயுள்ள மண்மலைமேடு (சூலக்கரை மேடு) கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி – வள்ளியம்மை தம்பதிக்கு கடந்த 26.1.1895-ல் மகனாப் பிறந்தவர் தியாகி சங்கரலிங்கனார். சிறுவயதிருந்தே தமிழ்ப் பற்றும், நாட்டுப் பற்றும் மிக்கவராக இருந்தவர். இளைய வயதில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். ராஜாஜி தொடங்கிய காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்து பணியாற்றினார். 1927ம் ஆண்டு மகாத்மா காந்தி விருதுநகர் வந்தபோது அவருக்கு உதவியாக பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, 1933ல் தீண்டா ஒழிப்புக்காக நடை பயணம் மேற்கொண்டபோதும் விருதுநகர் வந்த மகாத்மா காந்திக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்தவர் தியாகி சங்கரலிங்கனார். 1937ல் கரூரில் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார்.

தமிழ் மொழியின் மீது தீராத பற்றுகொண்ட சங்கரலிங்கனார், சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை “தமிழ்நாடு” என்று மாற்ற வேண்டும், ஜனாதிபதி, கவர்னர் பதவிகளை ஒழிக்க வேண்டும், அரசு ஊழியர்கள் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும், நீதிமன்ற நிர்வாக மொழியாக தமிழ்மொழி கொண்டுவரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளுக்காக கடந்த 27.7.1957ல் தனது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய சங்கரலிங்கனார் பின்னர், விருதுநகர் தேசபந்து மைதானத்தில்தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மதுரையிலுள்ள அரசு மருத்துவமனையில் தியாகி சங்கரலிங்கனார் சேர்க்கப்பட்டார். ஆனால், தனது கொள்கைக்காக அப்போதும் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் கைவிடவில்லை. தமிழுக்காகவும் தமிழ்மேல் கொண்ட தனது கொள்கைக்காகவும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி 76வது நாளான 1956 அக்டோபர் 13ம் தேதி தியாகி சுந்தரலிங்கனார் உயிர் துறந்தார்.

அதைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி தமிழக சட்டசபையில் எதிர்க் கட்சிகள் முழக்கமிடத் தொடங்கின. பின்னர், 1967ல் அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகத்துக்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரை கவுரவிக்கும் விதத்தில் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என ஒருமித்த கருத்தை தெரிவித்தன.

1967ல் ஆட்சிப் பொறுப்பேற்ற அண்ணா, தமிழகத்துக்கு “தமிழ்நாடு” என்று பெயர்சூட்டத் தீர்மானித்து, அதன்படி 1967 ஜூலை 18-ம் தேதி இதுதொடர்பான தீர்மானத்தை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அனைத்துக் கட்சி ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஜூலை 18ம் தேதி டான் இப்போது தமிழ்நாடு நாள் ஆக கொண்டாடப்படுகிறது.