இன்ஸ்டாகிராம் பார்த்ததை கண்டித்ததால் காஷ்மீர் செல்வதாக எழுதி வைத்துவிட்டு கன்னியாகுமரி மாணவிகள் மாயம்
Share
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வரும் இரு மாணவிகள், கடந்த 20ம் தேதி காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு வந்துள்ளனர். மாலையில் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் இரு மாணவிகளின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். மாறி, மாறி விசாரித்த போது தான் இரு மாணவிகளும் ஒரே சமயத்தில் மாயமான தகவல் இரு மாணவர்களின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. பல்வேறு இடங்களில் விசாரித்தும் மாணவிகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
இதையடுத்து மாயமான மாணவி ஒருவரின் தந்தை அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் மாணவிகள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளியில் வைத்து செல்போனில் ரகசியமாக இன்ஸ்டாகிராமில் வீடியோ பார்த்துள்ளனர். இதை பார்த்த ஆசிரியர், பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மாணவிகள் இருவரும் அவரவர் பெற்றோரை அழைத்துக் கொண்டுதான் பள்ளிக்கு வர வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால், இது குறித்து வீட்டில் தெரிவிக்காமல் இருந்த மாணவிகள் சம்பவத்தன்று பள்ளிக்கு வருவதாக கூறிவிட்டு மாயமானது தெரிய வந்தது.
இருவரும் பள்ளியில் விடுமுறை கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில் 2 பேரும் ஒரே மாதிரியாக லடாக் (காஷ்மீர்) செல்வதாக எழுதியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள போலீசார் மற்றும் மாணவிகளின் குடும்பத்தினர் மாணவிகளை தேடும் பணியை முடிக்கி விட்டுள்ளனர். மாணவிகளின் புகைப்படங்களை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் லடாக் பகுதியை சேர்ந்தவர்களுடன் நட்பு கிடைத்து அங்கு சென்று உள்ளார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மாணவிகள் இருவரும் காஷ்மீர் செல்வதாக எழுதி வைத்துவிட்டு மாயமாகி உள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.













