பீகார்: 40அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது குழந்தை; ஆக்ஸிஜன் வசதியுடன் மீட்பு பணிகள் தீவிரம்
Share
பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள குல் கிராமத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அக்குழந்தையைக் காப்பாற்றுவதற்கான மீட்புப் பணியில் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அக்குழந்தையின் தாயார், “நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதே இடத்தில் என் மகனும் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென கால் தவறி அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான்” என்றார். இதுதொடர்பாக காவல் துறையினர், “குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
குழந்தையை மீட்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம். மீட்புக் குழு சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளது. குழந்தை இன்னும் உயிருடன் உள்ளது, அவரது குரலை நாங்கள் கேட்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், “மீட்பு நடவடிக்கையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு உடனடி மருத்துவ உதவி வழங்குவதற்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய மருத்துவக் குழுக்களும் இடத்தில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.













