LOADING

Type to search

இந்திய அரசியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 46 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

Share

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், தோவாளை போன்ற பகுதிகளில் உள்ள வடக்கு மலை மற்றும் தெற்கு மலை பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆரல்வாய்மொழி பகுதிகளில் குரங்கு, கரடி, சிறுத்தை, யானை, மிளா ஆகியவை அதிக அளவு காணப்படுகின்றன. இதனிடையே மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் யானைக் கூட்டம் அடிக்கடி புகுந்து விவசாயிகளை அச்சுறுத்தி வருவதோடு விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் வருகிறது. இந்த சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வன விலங்குகளை வனப்பகுதிக்கு அடிக்கடி விரட்டி அனுப்புவது வழக்கமாக நிகழ்ந்து வருகிறது.

தற்போது வனப்பகுதியில் உள்ள குரங்கு கூட்டங்கள் தேவசகாயமவுண்ட் பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதுடன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்துகின்றன. அவற்றை விரட்டுகின்ற போது கடிக்க முற்படுகிற சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர்.

ஆரால்வாய்மொழி, தேவசகாய மவுண்ட் பகுதிகளில் அமைந்துள்ள புகழ்பெற்ற தேவாலயத்திலும் குடியிருப்பு பகுதிக்குள்ளும் ஏராளமான குரங்குகள் புகுந்து தேவாலயத்துக்கு வருகிற பொதுமக்களையும் அச்சுறுத்தத் தொடங்கின. இதுகுறித்து மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா உத்தரவின்
பேரில் பூதப்பாண்டி வனச்சரகர் ரவீந்திரன் அறிவுரையின்படி வனவர் ரூபன் குமார், வனக்காப்பாளர் அசோக், வன ஊழியர் துரைராஜ், வேட்டை தடுப்பு காவலர்கள் ஜெகன், சிவா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை பிடிப்பதற்காக கூண்டு வைத்தனர். கூண்டின் உள்புறம் பழங்கள் வைத்து வனத்துறையினர் மறைவான பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அட்டகாசங்கள் செய்து கொண்டிருந்த குரங்குகள் அந்த பகுதியில் வந்த போது பழங்களை பார்த்த மகிழ்ச்சியில் கூண்டுக்குள் சென்றன. இதில் 46 குரங்குகள் சிக்கின. பிடிக்கப்பட்ட குரங்குகளை வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.