பாஜக அலுவலகத்தில் அகற்றப்பட்ட பாரத மாதா சிலை
Share
விருதுநகர் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பாரத மாதா சிலை, இரவோடு இரவாக காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நான்கு வழிச்சாலையில் அமைத்துள்ளது விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகம். இந்த அலுவலகத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் கூடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியின் நிறைவாக அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் ஆன பாரதமாதா சிலையை நேற்று காலை நிறுவி பூர்வாங்க பணிகளை பணியாளர்கள் செய்து வந்தனர்.
இந்நிலையில் விருதுநகர் தாசில்தார், மற்றும் கோட்டாச்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினருடன் வந்து அனுமதி பெறாமல் சிலை வைத்துள்ளீர்கள் எனவே உடனடியாக இதை அகற்ற வேண்டும் என்றனர். இதை கேட்டதும் சிலையை அகற்ற முடியாது, சிலை பட்டா நிலத்தில் தான் உள்ளது என பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாஜக மாநில செயலாளரும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன் பாலகணபதி நிகழ்விடத்திற்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில் சிலையை மூடி வைப்பது என்றும் முறைப்படி அனுமதி கேட்பது என்றும் முடிவெடுக்கப்பட்டு சிலை துணியால் மூடப்பட்டது. காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு 12 மணிக்கு மேல் பாஜக அலுவலகத்தில் சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்ற காவல்துறையினர், பூட்டை உடைத்து, பாரத மாதா சிலையை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
விருதுநகரில் இன்று முதல் 11ம் தேதி வரை 3 நாட்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நடக்கவிருக்கும் நிலையில், அதனை தடுக்கும் முயற்சியாக இத்தகைய செயல்கள் நடப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.













