”80 நாட்களாக பிரதமர் ஏன் பேசவில்லை..?” – கேள்விகளை அடுக்கிய காங்கிரஸ்… ஆவேசமான அமித்ஷா
Share
மணிப்பூரில் உள்ள மாநில அரசை காப்பாற்ற பிரதமர் மோடி முயற்சி செய்வதாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது காங்கிரஸ் எம்பி கவ்ரவ் கோகாய் குற்றம்சாட்டினார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் விவாதம் பகல் 12 மணிக்கு கொண்டுவரப்பட்டது. தீர்மானம் குறித்து பேச காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய்க்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி அளித்தார். அதற்கு அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி குறுக்கிட்டு ராகுல்காந்தி எங்கே என்றும், அவர்தானே வாதத்தை தொடங்குவார் என்று எதிர்பார்த்ததாகவும் கூறினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பிரதமர் எங்கே என்று முழக்கமிட்டனர்.
அமளிக்கு இடையே மணிப்பூர் விவகாரம் குறித்து பேசத் தொடங்கிய காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய், பிரதமர் மோடி பற்றி பேசத் தொடங்கினார்.
அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக எதிர்ப்பை பதிவு செய்தார். தொடர்ந்து கவுரவ் கோகாய்க்கு ஓம்பிர்லா பேச அனுமதி அளித்தார். அப்போது பேசிய கவுரவ் கோகாய் பிரதமர் மோடி குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, பிரதமர் ஏன் மணிப்பூருக்கு செல்லவில்லை என்றும், கடந்த 80 நாட்களாக ஏன் பிரதமர் மோடி பேசவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். மணிப்பூர் முதலமைச்சரை நீக்காதது ஏன் என்றும் கவுரவ் கோகாய் கேட்டார். மணிப்பூர் விவகாரத்தில் நீதி வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதாகவும் கவுரவ் கோகாய் தெரிவித்தார்.













