மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Share
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு தமிழ்நாடு அரசே காரணம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டி உள்ளார்.
நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை மீண்டும் தொடங்கியதும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் நிதித்துறை செயல்பாடுகள் குறித்து பேசினார். அப்போது, மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசினார். பிற மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 700 படுக்கை மட்டுமே உள்ளது என்றும், மதுரையில் 900 படுக்கையுடன் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
இதனால் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் கூட கடன் கிடையாது என்றார். கட்டுமானத்துக்கு தேவையான நிலத்தை, உரிய நேரத்தில் தமிழக அரசு கையகப்படுத்தியிருந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்திருக்கும், இதன் காரணமாக 1,200 கோடி ரூபாயாக இருந்த எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு, 1900 கோடி ரூபாய் வரை சென்றதாகவும், இதற்காக தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டுமெனவும், மத்திய அரசு மீது பழிசுமத்த கூடாது என தெரிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழங்கினர். இதனை அடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழுவதும் இருந்து கேட்டுவிட்டு செல்லுமாறு நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.













