கன்னியாகுமரி அருகே பரிதாபம்: தாய் , 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை
Share
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி அனிதா(வயது 45) என்ற மனைவியும் சகாய திவ்யா(19) சகாய பூஜா மவுலிகா(16) ஆகிய மகள்களும் இருந்தனர்.
இந்த குடும்பத்தினர் கோயமு த்தூரில் வசித்து வந்த நிலையில் ஏசுதாசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். எனவே அங்கு ஆதரவின்றி தவித்து அனிதாவும் 2 மகள்களும் தங்களது சொந்த ஊருக்கே வந்து விட்டனர்.
சகாய திவ்யா இங்குள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். படிப்பில் கெட்டிக்காரியான சகாய திவ்யா, தான் இதற்கு முன்பு படித்த பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
சகாய பூஜா மவுலிகா அழகப்பபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.கணவர் இறந்த சோகம் மற்றும் கவனிக்க ஆளில்லாததால் அனிதா மிகவும் மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனாலேயே அடிக்கடி நோய்வாய்பட்டு உள்ளார்.
பல மருத்துவமனைகளில் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் அதிகமாக நோய்வாய்ப்பட்டதால் எங்கே நாம் இறந்து விடுவோமோ என்று அனிதா பயந்துள்ளார். மேலும், தான் இறந்துவிட்டால் தனது 2 மகள்களையும் கவனித்து கொள்ள யாரும் முன்வர மாட்டார்கள் என மிகுந்த மன உளைச்சலிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று (ஆக 10) காலை நீண்ட நேரமாகியும் அனிதாவின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. எப்போதும் காலையிலேயே அனிதா விழித்துக் கொண்டு வாசல் தெளிக்க வெளியே வருவார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கதவை தட்டி பார்த்தனர். ஆனால், யாரும் திறக்கவில்லை உடனே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு சென்று பார்த்த போது வீட்டில் உள்ள ஒரு அறையில் அனிதா, சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகா ஆகிய 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறையில் இருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். இதற்கிடையே வீட்டின் முன்பு குவிந்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பலரும் அனிதா மற்றும் அவரது 2 மகள்களின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். 2 மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.













